தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

பிற காரியங்கள்

நம்மவர் சிவபதம் அடைந்தவுடன் செய்ய வேண்டியவை, சாத்திரம், அந்தரட்டி, மசக்கம் முதலானவை செய்யும் வழி முறைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

1. இறுதிச் சடங்கு
2. காட்டிற்க்கு செல்லும் முன்
3. காட்டில் செய்வது
4. சாத்திரம்
5. அந்தரட்டி
6. மசக்கம் etc.

இறுதிச் சடங்கு


நம்மவர் ஒருவர் சிவபதம் அடைந்தவுடன், முதலில் அவரைக் குளிப்பாட்ட வேண்டும். குளித்து விட முடியவில்லை என்றால், உடம்பு முழுவதையும் ஈரத்துணியால் நன்கு சுத்தம் செய்து, பிறகு, பாயை என்றும் போல் போட்டு அதன்மேல்படுக்க வைக்க வேண்டும்.


ஆண்:

  • ஆண் என்றால் 4 முழவேஷ்டியை நன்றாகக் கோவணம் போட்டுக் கட்ட வேண்டும். அதன்மேல் மேலும் ஒரு வேஷ்டியை என்றும் போல் கட்ட வேண்டும்.முடிந்தால் சட்டை போடலாம்.
  • பின்பு, நெற்றியில் விபூதி இட்டு சந்தனம் வைத்துக் குங்குமப் பொட்டு வைத்து, அங்கவஸ்திரம் அணிவிக்கவும்.
  • கால்களைச் சம்மணம் போட்டுக் கட்டவும்.
  • பின்தலைமாட்டில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கவும்.

பெண் :

  • பெண் என்றால் முதலில் ஒரு புடவையைக் கட்டி அதன் மேல் வேறு ஒரு பட்டுப் புடவையைக் கட்டவும்.
  • சுமங்கலியாக இருந்தால் நெற்றியில் விபூதி இட்டுக் குங்குமப் பொட்டு வைத்து, நகைகள் போட்டு, பூமாலை அணிவிக்கவும்.
  • கணவனை இறந்த பெண்களுக்கு விபூதி மட்டும் நெற்றியில் இடவும். கால் நீட்டிப் படுக்க வைக்கவும்.
  • பின் தலைமாட்டில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கவும்.

விரதானம் , பசுதானம் :

  • சிவாச்சாரியாரைக் கூட்டி வந்து விரதானத்திற்கு உரிய பொருள்களை வாங்கி வந்து விரதானம், பசுதானம் கொடுக்கவும். (விரதானத்திற்கு உரிய பொருள்கள் பின்பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளது)
  • விரதானத்தை உயிர் போகும் நிலையிலும், உயிர் போனவுடனும் கொடுக்கலாம்.
  • பசுதானம் என்பது இறந்தவரின் வலதுகால் கட்டை விரலில் நூல் கட்டி வெளியில் கொண்டு வந்து தேங்காயில் சுற்றி வைத்துக் கொடுப்பது ஆகும். (சிலர் பசுவை, சிலர் பசுவுக்குரிய தொகையைக் கொடுப்பர்)
  • விரதானம் கொடுப்பவர்கள் தலையுடன் குளிக்க வேண்டும்.
  • விரதானம் முடித்து. சிவாச்சாரியார் வெளியில் போனபின், வாசலைப் பெருக்கி தண்ணிர் தெளிக்க வேண்டும். அதன் பிறகு உடலைச் சிறிது நகர்த்திப் படுக்க வைக்க வேண்டும்.
  • விரதானம் கொடுப்பது அவரவர்கள் விருப்பம். கொடுக்காமலும் படுக்கவைக்கலாம்.

பால் ஊற்றுதல் :

  • இறந்தவர்களின் வாயில் வீர்ராயன் பணம் அல்லது 25 பைசா நாணயத்தைப் போட்டு, முதலில் மகன்களும், பின் பேரன் பேத்திகளும் பால் ஊற்ற வேண்டும்.
  • பிறகு வீட்டுப் பெண்கள் அதற்குப் பிறகு உறவின் முறையினர் பால் விடவும்.
  • கடைசியாகக் காரியம் செய்பவர் பால் விடவேண்டும்.


நடுவீட்டில் படுக்க வைத்தல் :

  • நடுவீட்டில் பாயைத் திருப்பிப் போட்டு அதன் மீது ஒரு பெட்ஷீட் அல்லது போர்வையை விரித்து உறை நீக்கிய தலையணையை வைத்து உடம்பை அதன் மீது தலை வடக்கும் கால் தெற்குமாகப் பார்த்துப் படுக்க வைக்கவும்.
  • பின் வாய்க்கட்டு, கைக்கட்டு, மூக்கிற்குத் துணி, காலுக்குக் கால் கட்டு கட்ட வேண்டும்.
  • அருமைக்காரராக இருப்பின், துண்டை முழங்காலில் வைத்து ஊருமாலையாகச் சுற்றி ஆணின் தலையில் வைத்து வாய்க்கட்டுடன் கட்ட வேண்டும் உடலுக்கு வலதுபுறம் குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். உடம்பின் மேல் சாதா வேஷ்டியும், அதற்கு மேல் எடுத்து வரும் பட்டு வேஷ்டியைப் போர்த்தி, அதைக் கைக்குள் வாங்கிக் கழுத்துவரை போர்த்தவும். அங்கவஸ்திரத்தை இரண்டு பக்கமும் வரும்படி போட்டு, மாலை அணிவிக்க வேண்டும்.
  • பெண்களுக்கும் இவ்வாறே செய்ய வேண்டும். அமங்கலிகளுக்குப் பொட்டு, மாலை இல்லை.

மோட்ச விளக்கு :

  • ஒரு பித்தளைத் தட்டில் நெல் குத்தி அரிசி எடுத்து அல்லது 1.5 கிலோ பச்சரிசி வைத்து, 1 தேங்காய், 2 பழம், வெற்றிலை பாக்கு, அகல்விளக்கு அதில் சிறிது மஞ்சள்தூள் போட்டு சிறிய வெள்ளைத் துணியால் விளக்கை மூடவேண்டும்.
  • திருவண்ணாமலை போனவர்களாக இருந்தால் ஒரு சாமி வைக்க வேண்டும்.
  • 2 அச்சு வெல்லம் வைக்கவும். முக்காலி மீது தட்டத்தை வைத்துத் தேங்காய் கண்பகுதி பெரிதாக இருக்கும் படி உடைத்து அதில் நிறைய நெய் ஊற்றி, துணியில் திரி திரித்து, திரியை நெய்யில் நனைத்து நுனியில் சிறிது கற்பூரத்தை வைத்து விளக்கை ஏற்றவும். தேங்காய் எரிந்து போகாமல் இருக்க ஓடு ஒன்றை உடைத்துத் திரிக்கு இடையில் வைக்கவும்.
  • ஏற்றிய மோட்ச விளக்கை, பெரிய மருமகளும் உடன் செய்பவரும் முக்காலியுடன் எடுத்து வந்து வலது பக்கம் தலைமாட்டில் வைக்கவும். இதன் பின்தான் பெண்கள் கட்டி அழவேண்டும்.
  • வீட்டு ஆண்கள், பங்காளிகள் வெளியில் வந்து நிற்க வேண்டும். துக்கத்திற்கு வந்திருப்பவர்கள் கை தொட்டுத் துக்கத்தில் பங்கு கொள்வர்.
  • போனவர் அருமைக்காரர் என்றால் வீட்டிற்கு முன்பு 2 வாழைக் குறுத்தைக் கட்டவும்.

காட்டிற்கு எடுத்து செல்வதற்கு 3 மணி நேரம் முன்பாக செய்ய வேண்டியவை:

சமையல் செய்தல் :

மோட்ச விளக்கு எடுத்து வந்த பெண்கள் குளித்து விட்டு 200 கிராம் பச்சரிசி போட்டு சாதம் வைத்து, 50 கிராம் பாசிப்பருப்பை வேக வைத்து, சிறிய வாழைக்காய் ஒன்றை வாங்கி துண்டு போட்டு வேக வைக்க வேண்டும். உப்பு, தாளிதம் இவை இல்லை.

குளிப்பாட்டுதல்:

  • பங்காளிகள் மூன்று பேர் 1 மண்குடம், மற்றும் வேறு2 குடம் எடுத்துச்சென்று தண்ணீர் கொண்டுவரவும். (வாய்ப்பிருந்தால் 1 குடம் அவிநாசி தீர்த்தமும், காவேரி தீர்த்தமும் வேறு பக்கத்தில் கிடைக்கக்கூடிய தீர்த்தமும் அல்லது பக்கத்தில் உள்ள கோவில் கிணற்றில் உள்ள நீரையோ எடுத்து வரலாம்.)
  • குடத்திற்கு பூ சுற்ற வேண்டும். வரும்போழுது கொஞ்சம் பச்சை இலைகளையும் கொண்டு வரவேண்டும்.
  • காரியம் செய்யும் பெண்கள் 2 பேரும் சேர்ந்து மஞ்சள் அரைத்து வைக்கவும்.
  • வாசலில் ஒரு கட்டில் அல்லது பெஞ்சைப் போட்டு, காரியம் செய்ய மோட்சவிளக்கை முக்காலியுடன் கொண்டுவந்து வைக்கவும்.
  • இறந்தோரின் சடலத்தின் மேல் உள்ள மாலைகளை எடுத்து தலையை முன்பக்கமாகக் கொண்டுவந்து தெற்கு வடக்காகக் கட்டில் அல்லது பெஞ்சின் மேல் படுக்க வைக்கவும்.
  • பின் வாய்க்கட்டு, இதர கட்டுகளை அவிழ்த்து, மேலே போட்டிருக்கும் பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், உருமாலை ஆகியவற்றைத் தனியாக நனையாமல் எடுத்து வைக்கவும்.
  • பெண்களுக்கு பட்டுச்சேலையை எடுத்துவைக்கவும்.

எண்ணை அரப்பு வைத்தல் :

  • எண்ணெய், அரப்பு, ஒரு சொம்பு தண்ணீர் இவைகளைக் கொண்டுவந்து வைக்கவும்.
  • ஆணாக இருந்தால் முகசவரம் செய்தபின் எண்ணெய், அரப்பு வைக்கவேண்டும்.
  • முதலில் மகன்கள், பேரன்கள், ஆண் பங்காளிகள் வைத்த பின் மகள்கள், மருமகள்கள், பேத்திகள், பெண்பங்காளிகள் எண்ணெய், அரப்பு வைக்கவேண்டும்.
  • பின் ஆணாக இருந்தால் மகனும் பெண்ணாக இருந்தால் மருமகளும் தண்ணிர் வார்த்து விட வேண்டும்.
  • ஒருவர் தலையைப் பிடித்துக் கொள்ள எண்ணெய் அரப்புப் போகத் தேய்த்து குளிப்பாட்டிடவேண்டும்.
  • குளிக்கும் போதுகால்பகுதியில் இருந்துதலைபகுதிக்குத்தண்ணிர் ஊற்றவும்.

அபிஷேகம் :

  • கீழ்க்கண்ட பொருள்களை வைத்துக்கொள்ளவும்.
  • அபிஷேகத்திற்க்கு 2 பழம், கொஞ்சம் கரும்பு சர்க்கரை, திராட்சை,கல்கண்டு, தேன்
  • மேலும் பன்னீர், சந்தனம், இளநீர், காசித் தீர்த்தம், ஒரு குடத்தில் கொண்டு வந்த தீர்த்தம்
  • ஓர் இலையில் அபிஷேகத்திற்கு உரிய பொருள்களை வைத்து தேன் கலந்து பிசைந்து தலை, 2 தோள், நெஞ்சு, 2 முழங்கை, 2 முழங்கால்களில் வைத்து இலைமேல் கற்பூரம் ஏற்றி அப்பிரதட்சணமாக 3 முறை சுற்றிக் கட்டிலின் அடியில் போடவும்.
  • அபிஷேகம் செய்யும் பொழுது பேரன், பேத்திகள் நெய்ப் பந்தம் பிடிக்கவும்.
  • பிறகு அபிஷேகத்தை எல்லாம் எடுத்து கட்டலுக்கு கீழே போட்டுவிட்டு நன்றாக உடலை கழுவி விடவேண்டும்.
  • பின் இளநீர், சந்தனம், பன்னீர் இவற்றை உடலின் மீது விட்டு மீண்டும் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.
  • கடைசியாக காசித் தீர்த்தம், அவிநாசித் தீர்த்தம், காவேரி தீர்த்தம், கயிலைத் தீர்த்தம் போன்று என்னென்ன தீர்த்தங்கள் இருக்கின்றதோ அவற்றை விடவும்.
  • இறந்தவர் ஆணாக இறந்தால் அவரது மனைவியை அவருடைய சகோதரர் போழை மூடியில் புடவை, வெற்றிலை பாக்கு, கரிப்பொடி, சந்தனம், குங்குமம், மாலை, ஒருமுழம்பூ, பால் ஆகியவற்றை வைத்து எடுத்துக்கொண்டு சகோதரியை அழைத்து வந்து கால் மாட்டில் உட்கார வைக்க வேண்டும்.

பூம்பந்தல் :

  • சடலத்தைப் படுக்க வைக்கும் இடத்தில் கயிறு கட்டி கட்டிய பூச்சரம், கதம்பம் இவற்றை தொங்கவிட்டுப் பூம்பந்தல் போட்டு உள்ளே இருந்து கொண்டு வந்த பாய், தலையணையைப் போட்டுச் சடலத்தைப் படுக்க வைத்து விபூதி, சந்தனம், குங்குமம் வைக்கவும்.
  • உபதேசகாரராக இருப்பின் விபூதியைத் தண்ணீர் விட்டுக் குழைத்து இடவேண்டும். கைக்கட்டு, கால்கட்டு கட்டி மேலே போடவேண்டிய வேஷ்டியைக் கைக்குள் விட்டுக் கழுத்துவரை இழுத்துவிட்டு அங்கவஸ்திரம் மாலை அணிவிக்கவும்.
  • உபதேசம் கேட்டவராக இருந்தால் உபதேசம் பெற்றவர் தன் தலையையும், இறந்தவர் தலையையும் சேர்த்துத் துண்டால் மூடி மூல மந்திரத்தைக் கீழிருந்து மேலாகச்சொல்லவும்.
    • இதற்கிடையில் மனைவியை மருமகளும், உடன் செய்பவரும்
  • சேர்ந்து குளிக்க வைத்து வேறுபுடவை கட்டி குங்குமம், பூ வைத்துமாலை அணிவித்துச் சீர்செய்ய வேண்டும்.
  • உரலுக்கும் உலக்கைக்கும் மாவிலை கட்டி பங்காளிகள் 3 பேர் பொற் சுண்ணம், பொற்சுண்ணப்பாடலைப்பாடி இடிக்க வேண்டும்.

சாதம் படைத்தல் :

  • மருமகளும் உடன் செய்பவரும் சாப்பாடு எடுத்துவந்து சடலத்தின் வலது கால்மாட்டில் பெரிய தலைவாழையிலை, சிறிய தலைவாழையிலை போட்டு சிறியதில் சாதம், சிறிது பொரியல், பருப்பு வைத்துப் பழம் தோலுரித்து வைத்துச் சர்க்கரை, நெய் விட்டு மீதமுள்ள எல்லாவறையும் பெரிய இலையில் வைத்து தேங்காய் உடைத்து வைத்து வெற்றிலைபாக்கு, பழம் வைக்கவும்.
  • சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அப்பிரதட்சணமாகச் சுற்றிவிட்டு கற்பூர ஆரத்தியையும் அப்பிரதட்சணமாகச் சுற்றி அணைத்து விட்டு மீண்டும் தண்ணீர் சுற்றவும்.
  • சிறிய இலையைச் சாதத்துடன் ஆண்களுக்கு வேஷ்டியிலும் பெண்களுக்குப் புடவையிலும் கட்டவேண்டும். பெரிய இலையில் உள்ளதை எடுத்துவைத்து வண்ணாருக்கு கொடுக்கவும்.

புன்னப்பூ போடுதல் :

  • இடித்த பொற்சுண்ணத்துடன் பூவைச் சேர்த்து மகள் வயிற்றுப் பேரன் ஒருவன் 3 முறை போடவும். பொற்சுண்ணம் இடித்தவரும் மகனும் பொற்சுண்ணத்தைத் தூவவும்.
  • முன்பு போலவே கை, கால் இவைகளைக் கட்டி மூக்கிற்குத் துணி வைக்கவும்.
  • முன் அரைத்த மஞ்சளில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து மற்றவர் பார்த்துப் பயப்படாத அளவில் கண்ணிலும் வாயிலும் வைக்க வேண்டும்.
  • அதன்பிறகு கண் அடக்கத்தைக் கண்ணிலும், பல்வரிசையை வாயின் மேலும், நெற்றிப்பட்டையை நெற்றிலும் வைக்கவும் பிறகு முன்பு எடுத்து வைத்த வேஷ்டியைப் போட்டு, உருமாலையையும் வைக்கவும். ஆண்களுக்கும் சுமங்கலிப் பெண்களுக்கும் மாலைபோட்டு, விபூதி வைத்துப் பொட்டு வைக்கவும்.
  • அமங்கலிகளுக்கு விபூதி மட்டும் இடவும். பின் மனைவியை அழைத்து வரவேண்டும்.
  • முதலிலேயே மஞ்கள் கயறு கட்டி இருப்பர் அதையும், மாலையையும் கணவர்மீது போட்டு அழுவர்.

கோடி (அ) பட்டு போடுதல் :

  • கோடி அல்லது பட்டுப் போடுபவர் நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு கோடியைப் போழை மூடியில் வைத்து எடுத்து வரவேண்டும்,
  • அந்தப் போழை மூடியை வாங்கிக் கோடியை நேர் பங்காளிகள் போடவேண்டும்.
  • பெண்ணாக இருந்தால் பிறந்தவீட்டுக்கோடியை அவர்கள் பங்காளி போடவேண்டும்.

பாடையில் படுக்க வைத்தல் :

  • சடலத்தை எடுத்து வந்து பாடையில் படுக்க வைக்க வேண்டும். பாடையில் வைத்துப் பின் பல்லக்கு, தேர், அமர ஊர்தி என்று சுழலுக்கேற்ப எதில் வைக்க வேண்டுமோ அதில் வைக்கவேண்டும்.
  • தலை காட்டை நோக்கியபடி இருக்கவேண்டும்.
  • கணவர் இறந்து விட்டால் மனைவியின் சகோதரர் அவரை வெள்ளை வேஷ்டியைப் போர்த்திக் கூட்டி வந்து எதிரில் நிறுத்த அவர் மிஞ்சியைக் கழற்றிப் போட்டு சுற்றி வந்து நமஸ்காரம் செய்வர்.
  • மற்ற பெண்களும், மருமக்களும் சுற்றி வந்து நமஸ்காரம் செய்வர்.
  • மனைவி இறந்து விட்டால் புன்னப்பூ பந்தலில் மனைவி தன் கையில் வெற்றிலை பாக்குக்கொடுக்க கணவன் வாங்கிக் கொள்வது மரபு.
  • காரியம் செய்பவர் மோட்சவிளக்கை எடுத்துக்கொண்டு முன்னால் செல்லவேண்டும்.
  • இறந்தோரை எடுத்துச் சென்ற பின் வாசலில் இருந்து உள்பக்கம் முழுவதும் பெருக்கித் தண்ணிர் விட்டு கழுவி விட வேண்டும். (வாசலைக் கழுவமுடியாது என்றால் தண்ணீர் தெளித்துப் பெருக்கி விட வேண்டும்)
  • பின் 3 பங்காளிப் பெண்கள் வாசலில் நின்று சிறிது தயிரைத் தலையில் வைத்துக் குளிக்கவும்.
  • பெரியபடியில் கொஞ்சம் தயிரை வைத்து வீட்டிற்குள் போவதற்கு முன்பு வாசலைப் பார்த்தப்படி நின்று தயிர்ப்படியைப் பின்னால் வைத்துக் காலால் தட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் போகவும். இவை யாவும் ஈரத்துடன்தான் செய்ய வேண்டும்.
  • காட்டுக்கு எடுத்துக் கொண்டு போனவுடன் வாழைக் கம்பம், பூம்பந்தல், பூமுதலியவைகளை அறுத்துவிடவேண்டும்.


காட்டில் செய்வது

  • காட்டில் சடலத்தை இறக்கி வைத்து மோட்ச விளக்கைத் தலைமாட்டில் வைக்கவும். மண்பானையில் தண்ணீர் கொண்டு வரவும்.
  • வெல்லத்தை எடுத்து பொடி செய்து அரிசியில் சிறிது தண்ணீர் கலந்து கலக்கித் தலைமாட்டில் தண்ணீருடன் வைக்கவும்.
  • கையைக் கழுவிக் கொண்டு ஒவ்வொருவரும் 3 முறை வாய்க்கரிசி போடவேண்டும்.
  • எல்லோரும் வாய்க்கரிசி போட்டபின் காரியம் செய்பவர் கால்மாட்டில் உள்ள கோடித்துணியில் 1 அடி அகலத்தில் கிழித்து புறங்கையால் எல்லா அரிசியையும் அத்துணியில் போட்டு ஒரு மூட்டையாகக் கட்டவேண்டும்.
  • பின் வாய்க்கட்டு, கை,கால்கட்டு, அரனாக்கயிறு இவற்றை அறுத்துவிட வேண்டும்.
  • போட்டிருக்கும் நகைகள், வேஷ்டி, அங்கவஸ்திரம் இவற்றை எடுத்துவிடவும்.
  • பின் வலது தோளில் குடத்தை வைத்து ஒருசிறிய ஓட்டை போட்டு ஒரு சுற்று, 2வது ஒட்டை போட்டு 2வது சுற்று சுற்றி வர 3வது சுற்று வரும்போழுது கொள்ளியைக் கையில் கொடுப்பர்.
  • 3வது சுற்று சுற்றிவந்து தலையில் கொள்ளி வைத்துவிட்டு சிறிது தூரம் சென்று குடத்தை உடைப்பர்.
  • மாப்பிள்ளை முறையில் இருப்போர் அவரைச் சிறிது தூரம் அழைத்துச் செல்வர்.

காட்டில் இருந்து வீட்டிற்கு வரல்:

  • காட்டிலேயே குளித்துவிட்டு அல்லது வீட்டிற்கு வந்து வெளியில் நின்று குளித்துவிட்டு வாசலுக்கு வர வேண்டும்.
  • பித்தளைச் சொம்பிலே தண்ணீரையும், பசுஞ்சாணத்தையும் எடுத்துவரவேண்டும்.
  • பங்காளி ஒருவர் அவருக்கு விபூதி கொடுக்க அவர் நெற்றியில் இட்டுக்கொள்ளவும். தண்ணீர் உள்ள சொம்பைக் கையில் கொடுப்பர்.
  • பின் 8 முழ வேஷ்டி ஒரு கொத்து எடுத்து அதன் ஓரத்தில் சாணி சிறிது துடைத்து மாமன்மார்களோ அல்லது மைத்துனர்களோ வேஷ்டியைப்போர்த்தி வீட்டிற்குள் அழைத்துச் செல்வர்.
  • அவர் உள்ளே சென்று பலகையில் உட்கார்ந்து செம்பைக் கீழே வைத்துவிட்டு விளக்கைக் கும்பிட்டு விட்டு போர்த்திய வேஷ்டியுடன் வெளியே வந்து அனைவருக்கும் கேட்கும் படியாக மூன்றாம் நாள் நிகழ்ச்சி பற்றி மூன்றுமுறை சத்தமாக கூறுவார்.


மூன்றாம் நாள் - சாத்திரம் :

  • ஒரு பித்தளைத் தட்டு, அரை லிட்டர் பால், கொஞ்சம் நவதானியம், அகல்விளக்கு, 1 ஆணி, எத்தனை இடத்திற்கு அங்கம் எடுத்துச் செல்கிறோமோ அத்தனை டப்பா, அதைச் சுற்றிக் கட்ட ஈரிழைத்துண்டுகள் ஆகியவற்றைத்தயார் செய்துகொள்ளவும்.
  • காட்டில் அங்கக் கலசத்தை வாங்கி காட்டிலேயே 2 செங்கல்களைச் சேர்த்து வைத்து அதைக்கழுவி அதன் மேல் அஸ்தியில் உள்ள எலும்புகளை எடுத்த வைத்து அவற்றைத் தண்ணீர் விட்டுக் கழுவி சுத்தம் செய்து அகல் விளக்கின் மூலம் பால் ஊற்ற வேண்டும். பின் மீண்டும் தண்ணிர்விட்டுச்சுத்தம் செய்ய வேண்டும்.
  • நனைந்த தரையில் ஓர் உருவம், தலை, கை, கால் என வரைந்து அதன் மேல் நவதானியத்தை போடவும்.
  • ஆணியால் மண்ணை நன்றாகக் கீறிவிடவும். பின் இலையுடன் ஒரு செடியைக் கிள்ளி அந்த இடத்தில் நடவும். அதன்மேல் தண்ணீர் சிறிது விட்டு அந்தச் செடியில் உள்ள இலையைக் கிள்ளி 2 பக்கமும் போட்டு விட்டு அஸ்தியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வரவும்.
  • காட்டில் குளித்துவிட்டு அல்லது வீட்டின் முன்புறம் வந்து குளித்து விட்டு ஈரவேஷ்டியைப் பிழிந்து கட்டிக் கொண்டு விபூதியை அணிந்து கொண்டு கிழக்குப் பார்த்து நிற்க வேண்டும்.
  • பங்காளி வேஷ்டி மூன்றை மாமன் மைத்துனர் போர்த்த வீட்டிற்குள் சென்று பலகையில் உட்கார்ந்து சொம்பைக் கீழே வைத்துவிட்டு விளக்கைப்பார்த்துக்கும்பிடவும்.

வீட்டில் செய்ய வேண்டியவை :

  • அவர்கள் காட்டில் இருந்து வருவதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்து சமையல் செய்யவேண்டும்.
  • அகத்திக் கீரையையும், சிறிய கத்திரிக்காயையும், உப்பு மட்டும் போட்டு வேக வைத்துத் தயார் செய்யவும்.
  • நடு வீட்டில் பலகை போட்டு சடலத்தின்மீது போட்டு எடுத்துவந்த வேஷ்டியை அல்லது புடவையை அந்தப்பலகை மேல் வைத்து நகைகளையும் வைக்கவும்.
  • சாணிப் பிள்ளையார் பிடித்து வைத்துப் பூ, பொட்டு வைத்து அதன் முன்புறம் நுனி இலை போட்டு அதில் அகத்திக்கீரை, கத்தரிக்காயை வைத்துவிட்டுப் பின் வீட்டில் செய்த சமையலைப் பரிமாறவும்.
  • தேங்காய், பழம், வெற்றிலைபாக்கு வைத்து நெய் தீபம் அப்பிரதட்சணமாகக் காட்டிப் பூஜை செய்யவும்.
  • பின் வெறும் பித்தளைத் தட்டில் பூஜைக்கு வைத்த சாதத்தை எடுத்து சென்று காகத்திற்கு வைக்கவும்.
  • காகத்திற்கு வைத்தபின் தான் காரியம் செய்தவர் வீட்டிற்குள் வரவேண்டும் ஆரத்தி கிடையாது.

உருமாலை கட்டுதல் :

  • வந்த அனைவரும் சாப்பிட்ட பின் உருமாலை கட்டவேண்டும்.
  • மாமன்மார்கள், பங்காளிகள், சம்மந்திகள் கொத்து வேஷ்டி வைப்பார்கள்.
  • வந்த வேஷ்டியை நடுவீட்டில் விரித்துப்போட்டு அதன் மீது அனைவரும் உட்காரவேண்டும.
  • காரியம் செய்தவரும் கோடி போட்டவரும் கிழக்கு முகமாக உட்காரவேண்டும்.
  • பித்தளைத் தட்டம் ஒன்றில் 2 வெற்றிலை பாக்கு வைக்கவும்.
  • வந்த வேஷ்டியில் ஒன்றை எடுத்து நன்றாக மடித்து உருமாலை கட்டி அதை வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்து மாமன் எடுத்து முதலில் காரியம் செய்தவருக்கு கொடுக்கவேண்டும்.
  • அவர் தட்டை வாங்கி கீழே வைத்துவிட்டு உருமாலையை தலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு கோடி போட்டவருக்கும் உருமாலை ஒன்றை தட்டில் வைத்து கொடுக்க வேண்டும்.
  • அவரும் சிறிது நேரம் தலையில் வைத்துக் கொள்வார்.
  • பெண் போயிருந்தால் பட்டுப் போட்டவருக்கு உருமாலை தரவும்.
  • பின் வேஷ்டி யார் யார் வைத்தார்கள் என்பதைப் படிப்பார்கள்.
  • வேஷ்டிக்குப் பதிலாக மொய்வைப்பர். அதையும் படிப்பார்கள்.
  • மகள். மருமகளுக்கு, நெய்பந்தம் பிடித்த பேரன் பேத்திகளுக்கு மொய் வைத்துக் கொடுப்பர்.
  • பிறகு பல்லக்கு, தேர்கட்டிய செலவுக்கு என மகள்கள் பணம் கொடுப்பார்கள்.
  • அதற்கு மேல் ரூபாய் வைத்துத் திருப்பிக் கொடுக்க மேலே வைத்த பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மகள்கள் அப்பாவுக்கு அல்லது அம்மாவுக்கு எங்கள் செலவாக இருக்கட்டும் எனதிருப்பிக் கொடுப்பார்கள்.

குறிப்பு உருமாலை கட்டல் சடங்கிற்கு வேஷ்டி வைப்பவர்கள் ஒரு கொத்து எடுத்து வைப்பது பழக்கம்.

வந்த வேஷ்டிகளை ஒரு வருடத்தில் திதி வருவதற்குள் கட்டிவிட வேண்டும் என்பதாலும், திதிக்கு அந்தணர்களுக்கு தானமாகக் கொடுப்பது புண்ணியம் ஆகாது என்பதாலும் தற்காலத்தில் வேஷ்டி கட்டுவோர் குறைந்து விட்டதாலும் வேஷ்டியை யாருக்கு கொடுப்பது, யார் வாங்குவார்கள் என்ற சிக்கல்கள் இருப்பதாலும் வேஷ்டி வைப்பவர்கள் முக்கியமானவர்கள் இருவரோ, மூவரோ மட்டும் வைக்க மற்றவர்கள் மொய் வைப்பது நல்லது என்ற கருத்தை எங்கள் மனதில் பட்ட கருத்தாகச் சொல்லிகிறோம். பின்பற்றுவோர் பின்பற்றலாம்.

அடுத்து 10 நாட்களிலும் இரவு 8 அல்லது 9 மணிக்குமேல் வீட்டில் அனைவரும் சாப்பிட்டபின் இறந்தோர் படத்திற்கு முன் பழம் வைத்து கருடபுராணம் நாள்தோறும் முடிந்தவரை படிக்கவேண்டும். கருடபுராணம் படித்தபின்சாப்பிடக் கூடாது. தூங்க சென்றுவிடவேண்டும்.



அந்தரட்டி - 12ம் நாள்

  • காரியம் செய்த மருமகளும், உடன் செய்தவரும்முந்தினநாளே அரை இனிப்புப் போட்டு அரிசிமாவில் 21 அடை சுடவேண்டும்.
  • கால்கிலோ நெல்பொரி தயார் செய்யவும்.
  • பிண்டம் பிடிக்க அரைக்கிலோ பச்சரிசி, 1OO கிராம் கொண்டைக் கடலை, 100 கிராம் கோதுமை கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  • மற்ற பொருட்களை அய்யர் கொடுத்துள்ளபடி வாங்கிக் கொள்ளவேண்டும்.

12ம் நாள் காலை புறப்படும்முன் செய்ய வேண்டிவை:

  • குளிப்பாட்டிய இடத்தில் சாணியில் 2 இடத்தில் மெழுகவும்
  • பெரிதாக மெழுகிய இடத்தில் முக்காலியில் அஸ்தியை வைக்கவும்.
  • சிறிதாக மெழுகிய இடத்தில் சாணிப்பிள்ளையாரைப் பிடித்துக் கிழக்குப் பக்கமாக வைத்து முக்காலிக்கு அருகில் குத்து விளக்கேற்றி, தேங்காய் உடைத்து வைத்து 2 பழம், வெற்றிலை பாக்கு வைத்துப் பூப்போட்டு தூபம் காட்டி கற்பூர ஆரத்தி காட்டவும்.
  • வீட்டு அருமைக்காரி காரியம் செய்தவருக்கு, கோடி போட்டவருக்கு, பங்காளி ஒருவருக்கு என மூவருக்கும் வெற்றிலை பாக்குத்தரவும்
  • பிறகு அங்கத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.
  • ஆற்றங்கரையில் அல்லது குளக்கரையில் காரியம் செய்யும் முன் சவரம் செய்து, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் (முக சவரமும் செய்யலாம், மொட்டையும் அடிக்கலாம்)
  • காரியம் முடிந்தபின் வீட்டிற்குத் தகவல் தெரிவித்துக் கூறைக்குப் போடச் சொல்லவேண்டும். காரியம் செய்வதை அய்யரே சொல்லிக் கொடுத்துநடத்திக் கொடுப்பார்.

கூறைக்கு போடுதல் :

  • பலகையில் எடுத்து வந்த பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம் (பட்டுப்புடவை) நகை இவைகளை வைக்கவும்.
  • சாணிப்பிள்ளையார் வைத்துப் பொட்டு, பூ வைத்து 3 இலைப்போட்டு சமையலைப் பரிமாறி தேங்காய் உடைத்து வைத்து வெற்றிலை பாக்கு, பழம் வைத்துப் பூஜை செய்யவேண்டும்.
  • பின் காகத்திற்கு வைக்கவும். ஆற்றங்கரையில் காரியம் முடித்து வந்தவர்களை கிழக்கு பார்த்து நிற்கச் சொல்லி ஆரத்தி எடுக்கவும். பொட்டு வைப்பதில்லை, வெற்றிலை பாக்கு வைப்பதில்லை.




சிவ பதம் அடைந்தவர் ஆணாய் இருந்தால், அவரது மனைவிக்கு தாய் வீட்டிலிருந்து செய்ய வேண்டியவை

மசக்கம்

புடவை, சாப்பாட்டு சாமான்கள் தாயார் வீட்டிலிருந்து வாங்கி வந்து செய்ய வேண்டியது. செவ்வாய், சனி தவிர மற்ற நாட்களில் செய்யலாம்.


மூன்றாம் மாதம்

தாயார் வீட்டிலிருந்து அரிசி, அவல் அரை லிட்டர், நல்லெண்ணெய், புடவை, கம்பு, பச்சைமாவு கொண்டு வர வேண்டும்.

வருஷாப்தீகம் முடிந்த பின்
வருடம் கழிந்து வருஷாப்தீகம் முடிந்த பின் தாயார் வீட்டுக்குக் கூட்டிச் செல்லல் வேண்டும். பொதுவாக செவ்வாயன்று தாய் வீடு சென்று, புதனன்று எண்ணை தேய்த்துக் குளித்து திரும்ப வேண்டும். அன்று பிறந்த வீட்டில், புடவை எடுத்து கொடுத்து, ஒப்பிட்டு பலகாரம் செய்து திரும்ப அழைத்து செல்வர்.