திருமணம் - முகவுரை
நம் சமூகத்தினர் முன்பு எல்லாம் ஐந்து நாள் கல்யாணமாக, திருமணத்தை மிக விரிவாக நடத்தி வந்தனர். பின்னர், இரண்டு நாள் கல்யாணமாகவும், அதன்பின் ஒரே நாளிலும் திருமணத்தை சிறப்பாகவே நடத்தி வருகின்றார்கள். முன்பெல்லாம், திருமணம் – மணமகள் இல்லத்தில்தான் (நம் சமூகத்திற்க்கு சேர்ந்த அவிநாசி பார்வதி கல்யாண மண்டபம் இல்லாத காலத்தில்) சிறப்பாக நடத்தி வந்தனர்.
நம் சமூகத்தார் ஒன்று சேர்ந்து திருப்பூர் அருகே உள்ள அவினாசியில் மேற்கு ரதவீதியில் சகல வசதிகளுடன் "பார்வதி கல்யாண மண்டபம்" கட்டி முடித்த பின், நம்மவர்கள் பெரும்பாலும் திருமணத்தை நம் அவிநாசி பார்வதி கல்யாண மண்டபத்திலேயே நடத்தி வந்தனர்.
சமீப காலமாக நம் சமூகத்தினர் மற்ற கல்யாண மண்டபங்களிலும் பெரும்பாலான திருமணங்களை நடத்தி வருகின்றனர்.
குறிப்பு
- எல்லாச் சீர்களின்போதும், முகூர்த்தத்தின் போதும் குறிப்பாக மணவறைக்குள் நுழையும் போது
- அருமைக்காரர்கள் வேஷ்டி, உருமாலை அணிந்து, விபூதி, சந்தனம், குங்குமம் தரித்து கொண்டு செல்லுதல் நலம்.
- அருமைக்காரிகளும் பூர்ணமாக இருந்து(புடவை, பூ, மஞ்சள், குங்குமம், மங்கள ஆபரணங்கள் தரித்து) சீர்களை முறையாக நடக்க ஒத்தாசையாக இருத்தல் நலம்.
- மணமகன் தோழன் ("மாப்பிள்ளைத் தோழன்"), மணமகள் தோழி ("பெண்தோழி")ஆகிய இருவரும் - திருமணம் நிறைவடையும் வரை - மணமகனுக்கும், மணமகளுக்கும் எல்லா விதமான உதவிகளும் செய்ய அவர்கள் கூடவே இருத்தல் நலம்.
- அருகுமணம் எடுக்கும்போதும், ஆசீர்வாதம் செய்யும் போதும், "பதினாறும் பெற்று நோய் நொடி இல்லாமல் தீர்க்காயுசுடன் இருக்கவும்” என்று மணமகனையும், மணமகளை “தீர்க்க சுமங்கலியாய் சிறப்புடன் மனமொத்து வாழ்க" என்று மனதார வாழ்த்தல் வேண்டும், “வாழ்க வளமுடன் - நிறைந்த மனமுடன்" என்று மனதாரச் சொல்லியும் ஆசீர்வதிக்கலாம்.
- முன்னர் "நாகவல்லி வைபவத்தை"- அதாவது "நாளாணைத் தண்ணி வார்த்தலை" திருமணத்தில் மிகமுக்கிய நிகழ்ச்சியாக, தவறாமல் செய்து வந்தனர். கல்யாணம் விசாரிக்கப் போகிறவர்கள், "முகூர்த்தம், நாகவல்லி எல்லாம் எப்படி நடந்தது?" என்று விசாரிப்பார்கள்.
- தற்காலத்தில் ஒருசிலர் நாகவல்லியை விடாமல் சிறப்பாகச் செய்கிறார்கள். ஒருசிலர் என்ன காரணத்தினாலோ நாகவல்லியை விட்டுவிடுகிறார்கள். “நாகவல்லி வைபவம், ஊஞ்சல்” என்று பத்திரிகைகளில் போட்டுவிட்டு, நடத்தாமல் விட்டுவிடல் உசிதம் அல்ல.
- மேலும் இந்தச்சீர், புதுமணத்தம்பதிகளின், திருஷ்டி, பீடை . ஆகியவைகளை நீக்குவதற்காகவே பழங்காலத்திலிருந்து விடாமல் செய்து வந்தனர். ஆகவே இனிமேலும் இந்த சீரை விடாமல் செய்தால் மிக்க நலம்.
- மேலும் நாகவல்லி ஆகும் வரை மணமகன் சிகப்புப்பட்டு வேஷ்டிதான் கட்டியிருக்கவேண்டும். இந்த சீர் ஆனவுடன் தான் வெள்ளை வேஷ்டி உடுத்திக்கொள்ளுவார்.
திருமண சீர்கள்/சடங்குகள்
நமது சமூகத்தில் பெண் கேட்டு விடுவது முதல் தலை தீபாவளி/ இரண்டாவது தீபாவளி வரை பற்பல சீர்கள் சடங்குகள் இருப்பதால், படிக்கவும், தேடவும் சுலபமாக இருக்கும் வகையில் அவற்றை கீழ்க்கண்டவாறு பிரித்துள்ளோம்.
- திருமணத்திற்க்கு முன்
- நிச்சய தாம்பூலம்
- திருமண நாள் – முகூர்த்தம் வரை
- திருமண நாள் – முகூர்த்ததிற்க்குப் பின்
- திருமண நாள் சீர்கள்
- திருமணத்திற்க்குப் பின்
- ஊஞ்சல் பாட்டு
- திருமண சாமான்கள்