பண்டிகைகள் - சித்திரை- ஆனி
சித்திரை மாதம்
• சூரியன் மேஷ ராசியில் புகும் சித்திரை முதல் நாளில் புது வருடம் பிறக்கிறது. இன்று அதிகாலை எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி, கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும்.
• வீட்டில் பலகாரத்துடன் சமையல் செய்து, அதை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து பூஜை செய்ய வேண்டும். ஒப்புட்டு அல்லது வடை பாயசம் செய்து பூஜை செய்யலாம். அனைவரும் ஆண்டு முழுவதும் சகல சௌபாக்கியமும் பெற பிரார்த்திக்க வேண்டும்.
• சில வீடுகளில் "விஷுக் கனி காணுதல்" என்ற வழக்கமும் உண்டு. புத்தாண்டுக்கு முந்திய இரவில், ஒரு தட்டை எடுத்து அதில் மா, பலா, வாழை மற்ற பழங்கள், ரூபாய் நோட்டுகள், தங்க நகைகள்,தேங்காய், பழம், பூ, வெற்றிலை, பாக்கு இவற்றை வைக்க வேண்டும். ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து நகை அணிவித்து, கொன்றைப் பூ சாற்றி, பூஜை அறையில் கோலம் போட்டு தட்டை வைத்து பின் இந்தக் கண்ணாடியை அதற்க்கு முன் வைத்து விட வேண்டும்.
• வருடப்பிறப்பு சித்திரை 1 காலை எழுந்தவுடன், பூஜை அறைக்கு சென்று தீபமேற்றி, இவை அனைத்தையும் கண்ணாடியில் பார்த்து தன் முகத்தையும் கண்ணாடியில் பார்க்க , வருடம் முழுவதும், சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்.
• ஆண்டு முழுவதும் சகல சௌபாக்கியங்களும் பெற இறைவனையும், முன்னோர்களையும்
வணங்க வேண்டும். வீட்டில் பெரியோரை வணங்கி "விஷுக் கை நீட்டம்" பெறலாம்.
சித்ரா பௌர்ணமி :
• சித்ர குப்தன் யம தர்மனுக்கு உதவியாக, மனிதர்களின் பாவ புண்ணியங்களை குறித்து வைக்கும் சிறந்த தொழிலை செய்து வருகிறார். அவரை வழிபட்டு, விரதம் இருப்பதும், விழா எடுப்பதும் சித்ரா பௌர்ணமி அன்று தான்.
• மனைப் பலகையில், கரைத்த சந்தனத்தால் சித்ரா புத்திரன், எழுத்தாணி, ஓலை,
செக்கு மாடு, சூரிய சந்திரன் ஆகியவற்றை வரையவும். இந்த பலகையை பூஜை அறையில்
வைத்து, பூக்களால் அலங்கரித்து, நைவேத்யம் வைத்து, தேங்காய், பழம், பூ,
வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை செய்யவும்.
நைவேத்யம்:
சித்ரான்னங்கள், (சர்க்கரைப்பொங்கல், புளி சாதம் எலுமிச்சை சாதம், தயிர் சாதம்
) உளுந்து வடை, பாயசம், இட்லி, தோசை, பணியாரம், வாழை, சேனை வறுவல், நீர் மோர்
பானகம், இளநீர், நுங்கு.
இவற்றில் அவரவர் வீட்டு வழக்கப்படி சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.
பொங்கல் இருப்பவர்கள், சித்ரா பௌர்ணமி அன்று பொங்கலும் வைத்து வழி பட
வேண்டும்.