பண்டிகைகள் - தை- பங்குனி
தை:
உத்ராயண புண்ய காலத்தில் சூரிய பகவானைப் போற்றிக் கொண்டாடும் பண்டிகை 'பொங்கல்’ ஆகும்.
• தைப் பொங்கலுக்கு முதல் நாள் போகிப்பண்டிகை.
• வீட்டைச் சுத்தம் செய்து காப்புக்கட்டு, (பூளப்பூ, ஆவாரம்பூ மாவிலை மூன்றையும் இணைத்துக் கட்டியது) முன்வாயிலிலும் பின்வாயிலிலும் வாயிற்படியில் செருகி வைக்கவும்,
• இன்று மொச்சைச் சுண்டல் செய்து நிவேதனம் செய்யவும்,
• பொங்கல் உள்ளவர்கள் இரு நாள் முன்பே இரு மண் அடுப்புகள் (2 அளவினதாக ஒன்று பெரியது - சாதம் வைக்கவும், மற்றொன்று சிறியது - சர்க்கரைப் பொங்கல் வைக்கவும்) வாங்கி அடுப்புகளுக்கு சுண்ணாம்பு பூசி செம்மண்ணால் கோலம் இட்டு அலங்கரிக்கவும்.
• பொங்கலுக்கு இரண்டு பானைகளும் (ஒன்று பெரியது- சாதம் வைக்க , மற்றொன்று சிறியது -சர்க்கரைப் பொங்கல் வைக்க ) தேவை.
• பானையில் அரைவாசி, முக்கால்வாசி என்று பொங்கல் மற்றும் சாதம் வைக்கக்கூடாது என்பதால் முழுப் பானையிலும் வைத்தால் எந்த அளவு தேவைப்படுமோ அந்த அளவு பானைகளை பொங்கலுக்கு தேர்வு செய்து கொள்ளவேண்டும்.
- பொங்கல் அடுப்பு வைக்கும் முறை:
• பொங்கலன்று பொங்கல் வைக்கும் இடத்தில் செம்மண் மெழுகி கோலம் இட்டு அடுப்பின் வாய் மேற்க்குப் பார்த்து இருக்குமாறு வைக்கவும். ( அப்பொழுது தான் நாம் கிழக்குப் பார்த்து நின்று பானையை ஏற்றி அடுப்பில் வைக்கவும், பானையில் அரிசி போடும் படி நிற்கவும் முடியும்)
• பின்பு, பெரிய, சிறிய இரு பானைகளையும் விபூதி இட்டு சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரித்து வைக்கவும்.
• பச்சரிசியை நீர் கொண்டு களைந்து, அந்த அரிசி களைந்த நீரால் இரு பானைகளையும் நிரப்பி அடுப்பில் வைக்கவும். பொங்கல் பானையின் கழுத்து வரை அரிசி களைந்த நீரால் நிரப்ப வேண்டும். பானையின் விளிம்பு வரையோ அல்லது கழுத்திற்க்கு கீழோ இருக்குமாறு நீர் நிரப்பக் கூடாது.
• களைந்த அரிசியில் தேவையான அளவு பச்சரிசி நனைப்பதற்க்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
• பச்சரிசி செய்முறைக்கு இங்கு கிளிக் செய்யவும் >>
• அடுப்பு வைத்தபின் வெற்றிலை பாக்கு பழம் வைத்து அடுப்பிற்குப் பூஜை செய்து, முன்னோர்களையும், குல தெய்வத்தையும் வணங்கி கற்பூரம் கொண்டு அடுப்பைப் பற்ற வைக்கவும். அடுப்பு சீராக எரியுமாறு பார்த்துக்கொள்ளவும்.
• பொங்கல் பொங்கும் சமயம் “பொங்கலோ பொங்கல்" என்று கூறிச் சூரியனையும், குலதெய்வத்தையும், முன்னோரையும் நினைத்து கிழக்குப் பார்த்து நின்று பிரார்த்தனை செய்யவும்.
• பொங்கல் பொங்கியதும் பயத்தம்பருப்புடன் அரிசியைக் கலந்து கையளவு எடுத்து 3 முறை பானையைச் சுற்றி, சிறிதளவு அக்னி பகவானை நினைத்து வணங்கி அடுப்பிற்க்குள் போட்டு விட்டு மீதத்தை பானைக்குள் போடவும்.
• தேவைக்கு அதிகமாக பானைகளில் உள்ள நீரை கரண்டியால் எடுத்து விட்டு, பின்னர் அரிசியை பானைக்குள் போடவும்.
• சிறிய பானையில் சர்க்கரைப் பொங்கலுக்கு வறுத்த பாசிப்பருப்பு (பயத்தம்பருப்பு) மற்றும் களைந்த அரிசியைப் போடவும். பெரிய பானையில் வெறும் சாதத்திற்க்கு களைந்த அரிசியைப் போடவும்.
• சிறிய பானையில் சாதம் தயாரானதும் வெல்லம் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்யவும்.
• சர்க்கரைப்பொங்கல் செய்முறைக்கு இங்கு க்ளிக் செய்யவும் >>
• பொங்கல் வைத்த பானை முழுதாக இருக்க வேண்டும், அரை வாசி, முக்கால் வாசி என்று இருக்கக் கூடாது.
• பொங்கல் வைத்த இடத்திற்கருகில் செம்மண் மெழுகிக் கோலமிட்டு மஞ்சள்பிள்ளையார் பிடித்து வைக்கவும். பிள்ளையாருக்கு முன் பொங்கல் பானைகளை மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, பூ எல்லாம் கட்டி அலங்கரித்து வைக்கவும்.
• சாணியால் மெழுகிய முறத்தில்
o சிறிய துண்டு பரங்கி 1,
o வாழைக்காய் 1.
o சிறிய துண்டு சேனை,1,
o சிறிது அவரை 4,
o மொச்சை 4,
o சக்கரைவள்ளிக்கிழங்கு 1,
o உடைக்காத தேங்காய் 1,
o கரும்புத் துண்டு 1,
o மஞ்சள்கொத்து,
o இஞ்சிகொத்து,
o பூளைப்பூ
ஆகியவற்றை வைக்கவும்.
• தட்டிலோ மற்றொரு முறத்திலோ நுனி இலை வைத்துப் பொங்கல் சாதத்திலிருந்து ஒடுக்குச்சாதம் வைக்க சாதம் பிடித்து, அதன் மேல் நாட்டுசர்க்கரை, வாழைப் ழத்துண்டு வைத்து, நெய் விட்டு ஒடுக்கு சாதம் வைக்கவும். (ஒற்றைப் படையில் 7 அல்லது 9 ஒடுக்கு சாதம் வைக்க வேண்டும்)
• பச்சரிசி ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.
• பின்னர் இருபுறமும் குத்துவிளக்கேற்றி, தேங்காய், பழம், வெற்றிலைபாக்கு வைத்து பூஜை செய்யவும். பிள்ளையாருக்கும் , சூரிய பகவானுக்கும் கற்பூர ஆரத்தி காண்பித்து, வணங்க வேண்டும்.
• நம் சமூகத்தில் பொங்கல் உள்ளவர்கள் , பொங்கல் இல்லாதவர்களை பொங்கல் விருந்துக்கு அழைத்து ஆனந்தமாகக் கொண்டாடுவது மரபு.
- சமையல்:
3 பொரியல் - பரங்கி, அவரை, சக்கரைவள்ளிக்கிழங்கு, வறுத்த பயத்தம்பருப்பு, மொச்சை போட்ட காய்க்குழம்பு, மோர்க்குழம்பு, வறுவல்கள், அப்பளம், வடை.
• முதல்நாள் பொங்கல் பொங்கியவுடன் களைந்த அரிசியைக் கன்னிப்பெண்கள் பானைக்குள் போடுவது வழக்கம். சக்கரைப் பொங்கலுக்குப் பதில், கற்கண்டுச் சாதமும் செய்வர்.
• மார்கழியில் பிடித்து வைத்த சாணிப் பிள்ளையாரை எடுத்து பூஜை செய்யும் இடத்தில் வைத்து பூஜை செய்யவும்.
• மாலையில் பூ பறிப்பது என்பது விசேஷ விழா, அதற்கு பொரி, சுண்டல், நிலக்கடலை, சக்கரைவள்ளிக்கிழங்கு பண்டங்களைச் செய்து எடுத்துக் கொண்டு வெளியிடங்களுக்கு மகிழ்ச்சியாக சென்று கொண்டாடுவார்கள்.
• தை அமாவாசையில் இருந்து 7ஆம் நாள் ரதசப்தமி வரும்.
• இந்நாளில் கதிரவனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்,
• மனைப்பலகையில் சந்தனத்தால் தேர், சூரியன், சந்திரன் வரைந்து, சந்தனம், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரிக்கவும்.
• பொங்கல் உள்ளவர்கள் பொங்கல் வைத்து நைவேத்தியமாக செய்து சூரியனுக்கு வைத்து பூசிக்கவும். பொங்கல் இல்லாதவர்கள் சர்க்கரைப் பொங்கல் வைத்துப் பூசிக்கவும்.
• தைமாதம் பெளர்ணமி பூசநட்சத்திரத்து அன்று "தைப்பூசம்" கொண்டாடப்படும்.
• மதியம் வடை, பாயாசம் (அல்லது) ஒப்புட்டுச் செய்து முருகப்பெருமானுக்கு நிவேதனம் செய்யவும்.
• இன்று மாலை நிலா உதயமாகும் நேரத்தில் சுவற்றில் தேர் செம்மண்ணால் வரைந்து கேசரி, வடை போன்றவற்றைச் செய்து படைக்கவும்.
மாசி
• மாசிமாத தேய்பிறை சதுர்த்தியில் வருவது மகா சிவராத்திரி.
• இன்று மதியம் இட்லி, உளுந்து, வடை, அவரைக் கொட்டை, கொள்ளு கலந்து சுண்டல், பயறு சுண்டல், வறுவல் ஆகியவற்றைச் செய்துச் சிவனுக்கு நிவேதனம் செய்து வழிபடவும்.
• இன்று மாலை சிவாலயம் சென்று, இரவு முழுக்க நடக்கும் 4 சாம பூஜையில் கலந்துகொள்ளலாம்.
பங்குனி
7) தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி):
• பெண்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்து மதியம் நாட்டுச் சர்க்கரை வேப்பம்பூ கலந்து பூஜைக்கு வைக்கவும், ஒப்புட்டு, பலகாரம் செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்யவும்.
• சில குடும்பங்களில் பஞ்சாமிர்தம் செய்து அதில் வேப்பம்பூ கலந்து நிவேதனம் செய்யும் வழக்கமும் இருக்கிறது.
8) வீட்டுத்தவ பூஜை:
• நம்மவர்களில் பலபேர்களுக்குத் தலைகட்டுக்கு ஒருமுறை வீட்டுத்தவம் செய்வது வழக்கத்திலுள்ளது. பொங்கல் இருக்கும் தருணத்திலே இஃது செய்வது வழக்கம். அதை அம்மாபாளையத்திலுள்ளவர்கள் முதல் குழந்தைக்குக் கர்ப்பம் தரித்திருப்பவர்கள் 7-ம் மாதத்தில் செய்து வருகிறார்கள்.
• வீட்டைச் சுத்தம் செய்து வெள்ளையடித்துப் பங்காளிகளையும் மாமன், மச்சான்களையும் அழைத்துச் செய்வது வழக்கம்.
• தவம் செய்யும் பெண் காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து விரதம் இருக்க வேண்டும்:
• கோயில் நந்தவனத்தில், ஊர் எல்லையில் கன்னிமார் உள்ள இடத்திற்கு சென்று பத்துப்படி பானை வைத்துப் பொங்கல் வைக்கவேண்டும்.
• இதற்கு பொரியல் வகைகள் பருப்பு, கூட்டு, பச்சடி, நம் காய்க்குழம்பு, மோர்க்குழம்பு, கம்புமாவில் வள்ளதடி, வாழைதடி, வறுவல்கள் தவம்செய்யும் பெண் செய்ய வேண்டும்.
• பூஜை வீட்டில் செய்ய வேண்டியது : மாலை நேரம் 5 1/2 மணியில் செய்ய வேண்டும்.
பேழைமூடி:
• பேழைமூடியில் கெண்டி, அரிவாள், கன்னிப்பெண், தென்னம்பூ: தாழம்பூ இளநீர், வெற்றிலைப்பாக்கு, பழம் வைத்துப் பூஜை செய்யவும்.
• பொங்கல் வைக்கும் பெண் பேழைமூடியைப் பெரியோர் மூலம் தலையில் துணி சும்மாடுடன் வைத்துக் கெண்டியை கையில் பிடித்துக்கொண்டு, துத்தாரி ஊதிக்கொண்டு பொங்கல் வைக்கும் இடத்திற்கு எல்லோருடன் சென்று 6 மணிக்குமேல் பொங்கல் வைக்கவும்.
• கன்னிமார்களுக்குச் சகல அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி, பொட்டு, பூ வைத்து அவர்கள் முன் 21 நுனி இலையில் சகல பதார்த்தங்களும் வைத்து, பொங்கலையும் வைத்துச் சர்க்கரை பழம் வைத்து 21 இலைக்கும் தேங்காய் உடைத்து வைத்து, வெற்றிலை பாக்கு வைத்துப் பூஜை செய்யவும். இப்பூஜை உள்ள சுமங்கலிகள் மட்டும் ஒவ்வொருவரும் இவைகளை முந்தானையில் வாங்கி அம்பாளை வழிபடவும், விருந்தோம்பல் நடத்தவும்,
• பொங்கல் உள்ளவர்கள் வீட்டில் முன்னோர்களுக்குத் திதி வரும் பொழுது அவர்களை நினைத்து கூரைக்குப் போடலாம்.