தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

பண்டிகைகள்- ஐப்பசி- மார்கழி

  1. தீபாவளி
  2. கார்த்திகை தீபம்
  3. கன்னிமார் பூஜை
  4. பிள்ளையார் நோன்பு
  5. திருவாதிரை
  6. வைகுண்ட ஏகாதசி



ஐப்பசி

1) தீபாவளி:

வீட்டில் அனைவரும் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி பின்பு புத்தாடை உடுத்திப் பூஜையறைச் சென்று வழிபாடு செய்யவும். மாலையில் கோவிலுக்குச் சென்று வழிபடவும்.



கார்த்திகை

இம்மாதம் முழுவதும் முன்வாசலில் இருபுறமும் இரண்டு அகல் விளக்குகளை மாலையில் ஏற்றி வைக்கவும்.

2) கார்த்திகை தீபம்:

• பெரிய கார்த்திகை அன்று இல்லங்கள்தோறும் தீபம் ஏற்றி சிவனுக்காக கொண்டாட்ப் படுகிறது. முன்தினம் பரணி தீபம் வாசலில் நூற்ற வேண்டும். மறுநாள் விரதம் இருந்து தீபம் ஏற்றி இரவு பலகாரம் சாப்பிட வேண்டும்.

• அண்ணாமலையாருக்கு மாவிளக்கு வைத்து வெல்லப்பாகில் பொரி கலந்து வைத்து நிறைய தீபங்கள் துற்றிப் பூஜை செய்து அவ்விளக்குகளை வாசலிலும் வீடு முழுவதும் அனைத்து இடங்களில் வைக்கவும். மறுதினம் பொங்கல் உள்ளவர்கள் வீட்டில் கன்னிமார் பொங்கல் வைத்துப் பூஜை செய்யவும்.


3) கன்னிமார் பூஜை:

  • 5 சிறிய கூழாங்கற்கள் எடுத்து வைக்கவும்

• அவைகளுக்குக் காலை எண்ணெய், மஞ்சள்துள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், பால், தேன், சந்தனம், இளநீர் அவைகளால் நீராட்டி சிறிய வஸ்திரம் கட்டி பொட்டு, பூ வைத்து தரையில் அரிசி பரப்பி இவற்றை (கல் வரிசையாக வைக்கவும்.

• பொங்கல் வைத்து ஒடுக்குச் சாதம் வைத்து, நீர்மோர், பானகம் வைத்துப் பூஜை செய்யவும்.



மார்கழி

• இம்மாதம் முழுவதும் அதிகாலை வாசல் தெளித்துக் கோலம் போட்டு பசுவின் சாணியிலே பிள்ளையார் பிடித்து அதன்மேல் பரங்கிப் புஷ்பம் வைத்து கோலத்தின் நடுவில் வைக்கவும்.

• பின் வாசலின் இருபுறமும் விளக்கேற்றவும்; பொங்கல் உள்ளவர்கள் தைமாதம் வரை இதனைச் செய்து அப்பிள்ளையார்களை பூப்பொங்கல் அன்று பூஜை செய்வதற்காக எடுத்து வைக்கவும்.

• மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் தவறாமல் திருவெம்பாவை, திருப்பாவை ஆகியவற்றைப் படிக்கவும்.


4) பிள்ளையார் நோன்பு:

• சஷ்டி, சதயம் சேரும் நாளில் இந்நோன்பு வரும். எண்ணெய் தேய்த்து குளித்து, திருவாதிரை நோன்பு வரை விரதம் இருக்கவும்.

• பூஜையறையில் இட்லி, வடை, பயறு, கடலை சுண்டல், வாழை, சேனை வறுவல், இட்லி, வடை, நாட்டுச்சர்க்கரை சிறிது வைத்து நெய் விடவும்.

• தேங்காய் உடைத்து, பழம், வெற்றிலைபாக்கு வைத்து பூஜை செய்யவும்,

• இன்றிலிருந்து திருமணமான பெண்கள் திருவாதிரை நோன்பு வரை,காலையில் ஏதும் சாப்பிடாமல் ஒருபொழுது விரதம் இருந்து மாலையில் திருவெம்பாவை தினமும் படிக்கவும்.

• இறுதியில் கற்பூரம் காட்டிப் பூசிக்கவும்.


5) திருவாதிரை:

• நம்மவர்கள் பண்டிகைகளில் முக்கியமானது இதுவாகும். பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாய் இருக்க வேண்டிச் செய்யும் பூஜையாகும்.

• பூஜை செய்யும் இடத்தில் சதுரமாக செம்மண்ணால் வழித்து காய்ந்தபின் மாக்கோலம் போடவும். கோலத்திற்குமுன் சிறிதாக செம்மண் மெழுகி அதன் மேல் மஞ்சப்பிள்ளையார் வைக்கவும்.

• இதற்கு முன் செம்மண் மெழுகிய இடத்தில் அம்மி வைக்கும் அளவிற்கு அரிசியோ, நெல்லையோ பரப்பவும்.

• அதன்மேல் அம்மிக்கல் வைத்து அதன்மேல் அரிசி நிரப்பிய படியை வைக்கவும். படிக்குப் பின் குழவியை வைக்கவும்.

• எலுமிச்சம்பழம் குத்திய எழுத்தாணி (அல்லது இரும்புக் கம்பியைப் படிக்குள் குத்தவும். மஞ்சள் தடவிய நூலால் அம்மிக்கல், படி, குழவி, எழுத்தாணி ஆகியவற்றைச் சேர்த்து சுற்றவும். பூத்தொடரால் அலங்கரிக்கவும், அலங்கரித்கா இந்த அம்மியை சிவபெருமானாக பாவித்து பூஜை செய்ய வேண்டும்.

• குடும்பத்திலுள்ள சுமங்கலி பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தட்டில் நுனி இலை போட்டு, பொரியல் வகைகள் 5 அல்லது 7 வறுவல்கள் பரிமாறி

• ஓர் ஒடுக்குச் சாதம் பிடித்து 3 இனிப்பு அடைகளால் மூடவும். ஒரு கணவருக்கு இரண்டு தாரம் உடையவரானால் இரண்டு ஒடுக்குச் சாதம்

  • வைக்கவும்.

• இரண்டு வெற்றிலை, ஒரு பாக்கு, வாழைப்பழம் ஒன்று, ஒரு தேங்காய் உடைத்து வைத்து அலங்கரித்த அம்மியான சிவபெருமான் முன் வைக்கவும்.

• பெண் குழந்தைகளுக்கு ஒரு கிண்ணத்தில் ஏழு அடைகள் உரித்த 1 வாழைப்பழம் வைத்து தட்டின் அருகில் வைத்து பூஜை செய்யவும், நோன்பு கும்பிடமுடியாத சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு மற்றும் வெளிநாட்டில் உள்ள திருமணமான பெண்களுக்கும் அவர்களின் தாயாரோ, மாமியாரோ அவர்களுக்காகத் தட்டும், பேத்திகளுக்காகக்கிண்ணங்களும் வைத்துப் பூஜை செய்யவும். திருவாதிரைக்குக் திருவாதிரைக்களியும் செய்யலாம்.

• திருவாதிரைக்களி செய்யும் முறை பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்

• பிள்ளையாருக்கு முன் தேங்காய் பழம், வெற்றிலை, பாக்கு வைத்து பூஜை செய்யவும்.

• திருவெம்பாவை பாடல்கள் பாடும் பொழுது ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கற்பூரம் ஏற்றி மணி ஒலிக்க "திருச்சிற்றம்பலம்" என்று எல்லோரும் சேர்ந்து கூறி வணங்கவும்.

சமையல் முறை:

திருவாதிரைக்கு கொடிக்காய்கள் சிறப்பு. பரங்கி, அவரை, மொச்சை. பீர்க்கன், பாகல், தட்டை, புடல் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகிய பொரியல் செய்யவும், வறுத்த பயத்தம்பருப்பு, பூசணி, மோர்க்குழம்பு காய்க்குழம்பு, கூட்டு, பச்சடி, வாழை, சேனை வறுவல் ஆகியவற்றுடன் இனிப்பு அடையும் செய்யவும். இந்த இனிப்பு அடையே இந்நாளின் விசேஷ பலகாரம். புதுமாப்பிள்ளை வந்தால் 'கச்சாயம் செய்து சிறப்புப் பலகாரமாகப் போடவும்,


6) வைகுண்ட ஏகாதசி:

• மார்கழி மாதம் வரும் ஏகாதசிக்கு "வைகுண்ட ஏகாதசி" என்பர். இன்று நெல்லியும் மிளகும் அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கவும். இன்று பெருமாள் கோவில் சென்று "சொர்க்க வாசல்" வழியாக சென்று இறைவனை வழி படவேண்டும்.

• இன்று சிலர் பால், பழம் மட்டும் அருந்தி முழு விரதம் இருப்பர். இன்று சாதம் சாப்பிடாமல் இட்லி, அரிசி, உப்புமா, சப்பாத்தி சாப்பிடுவது நம்மவர் வழக்கம்.

• மறுநாள் துவாதசி. நெல்லிக்காய் தயிர் பச்சடி, அகத்திக்கீரை பொரியல் ஆகியவற்றுடன் விசேஷ சமையல் செய்து வடை பாயசத்துடன் பெருமாளுக்கு நிவேதனம் செய்து பூஜை செய்து விட்டு பாரணை சாப்பாடு.