பண்டிகைகள்- ஆடி- புரட்டாசி
- ஆடி நோன்பு
- ஓலைக்கா நோன்பு
- ஆடி வெள்ளி
- ஆடிப் பதினெட்டு
- ஆவணி ஞாயிறு
- விநாயகர் சதுர்த்தி
- நவராத்திரி
- சரஸ்வதி பூஜை
- ஆயுத பூஜை
- விஜயதசமி
ஆடி மாதம்
• பொங்கல் பண்டிகை, உள்ளவர்கள் மட்டும் ஆடி நோன்பு கும்பிட வேண்டும்.ஆடி மாதம்18ம் தேதிக்கு முன் ஒரு நல்ல நாளில் இந்த நோன்பு செய்ய வேண்டும்.
• ஆடி நோன்புக்கு வீடு முழுவதும் அலம்பி விட்டு பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து ,சுவற்றில் மஞ்சளால் வட்டம் இட்டு விபூதி,குங்குமம் வைக்கவும்.
• மஞ்சள் தூளில் பிள்ளையார் செய்து வெற்றிலை மேல் வைக்கவும். அவருக்கு முன்னால் மனை பலகையை வைத்து அதன் மேல் புதிய வேட்டி, புதிய புடவை, சங்கிலி,காசுமாலை வைக்கவும்.
• பிள்ளையாருக்கு சந்தனம்,குங்குமம் இட்டு பூக்களால் அலங்கரிக்கவும். கூரைப்புடவை உபயோகிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கூறைப் புடவை வைத்து அதன் மேல் மெட்டியும்,தாலியும் வைக்கவும்.
• பலகை முன் 2 தேங்காய் உடைத்து, பழம் ஒரு சீப்பு, வெற்றிலை பாக்கு வைக்கவும்.
நைவேத்தியம்:
ஒன்பது வகை காய்,பொறியல், பருப்பு, மோர்க்குழம்பு, காய்க் குழம்பு, கூட்டு, பச்சடி, உளுந்துவடை, அதற்கு துறுவிய தேங்காய் பூ, நாட்டு சக்கரை, உரித்த பழம், கடலை பருப்பு பணியாரம் ஆகியவை.
கூறைக்கு போடுதல்:
• அடுத்து "கூரைக்கு"போடவேண்டும். 5 நுனி இலைகளை போட்டு சமைத்த பதார்த்தங்களை பரிமாறவும். தூப, தீபம்காட்டி பூஜை செய்யவும். ஆண்கள் பூஜை செய்யவும்.
• ஒரு தட்டில் நுனி இலை வைத்து எல்லா இலைகளில் உள்ள பதார்த்தங்களிருந்து சிறிது சிறிது எடுத்து வைக்கவும்(தயிர் தவிர). பின் கூரை மேல் அல்லது மொட்டை மாடியில் காகத்திற்கு வைக்கும் இடத்தை பஞ்சபாத்திரத்தில் உள்ள நீரால் சுத்தம் செய்து தூபம் காட்டி இலையை வைக்கவும். மறுபடியும் வந்து இலைகளிலுள்ள சாதத்தையும் தயிரையும் எடுத்து சென்று இலையில் "மறு சாதம்" வைக்கவும்.
• நோன்பு இல்லாதவர்களை இன்று விருந்துக்கு அழைப்பார்கள்.
• ஆடி நோன்புக்கு"ஓலைக்கா நோன்பு" என்றும் பெயர் உண்டு. சில வீடுகளில் பனை ஓலையினால் பதுமைகளை செய்து அவைகளை பலவிதமான ஓலை ஆபரணங்களால் அழகு செய்வர்.
• மாவிளக்கு அல்லது பலகாரம் செய்து முதல் நாள் வழிபடுவார்கள்.
• மறுநாள் சமயவைப்பதற்க்கு ஓலைக்காவுக்கு செம்மண் துணி கட்டி மணை (ஒரு பாத்திரத்தில் நெல் கொட்டி வைத்து தேங்காய் பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள்) வைத்து கம்பு மற்றும் தினை மாவு, பலகாரம் செய்து படைத்து குடும்பத்தார் அனைவரும் சாப்பிடுவார்கள்.
• மூன்றாம் நாள் நோன்பு அன்று, ஓலைக்கா வைத்த இடத்தில் விளக்கேற்றி மணையை வைத்து, ஒரு தட்டில் ஓலைக்காவை எடுத்து வைத்து எண்ணை நீராட்டி, மஞ்சள் நீராட்டி மஞ்சள் துணி கட்டி பொட்டு வைத்து, பூ வைத்து, கூறைக்குப் போடுமிடத்தில் வைத்து பூஜை செய்வார்கள்.
• பூஜை முடிந்த அன்று "ஓலைக்காவை" எடுத்து தட்டில் வைத்து "ஓலைக்கா கொண்டையிலே ஒரு கூடை தாழம்பூ" என்று கைக்கொட்டியபடி பெண்களும் சிறுமிகளும் கைகொட்டிப் பாடிக்கொண்டு தடைச் சுற்றி ஆடி வருவார்கள்.
• பின்பு அன்று மாலை குளக்கரைக்கு எடுத்துச் சென்று கற்பூரம் ஏற்றி அவைகளை எரித்து சாம்பலைக் குளத்தில் கரைத்து விடுவது வழக்கம்.
• தற்காலத்தில் ஓலை கிடைக்காததாலும், வெளியிடங்களுக்கு சென்று விட்டதாலும்,இந்த வழக்கம் மறந்தும்,மறைந்தும் வருகிறது.
• ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் பச்சை மாவு இடித்து, மாவிளக்கு ஏற்றி அம்பாளை வழிபடவேண்டும். மாவிளக்கை கோவிலுக்கும் எடுத்து சென்று வழிபடுவதும் மேலும் சிறப்பாகும்.
• ஆடி மாதத்தில் ஒரு வெள்ளியன்று அவரவர் குலதெய்வ அம்மன் கோவிலுக்கு சென்று மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் குடும்பம் சுபிட்சமடையும்.
• இன்று பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.மதியம் ஒப்பிட்டு செய்து சுவாமிக்கு நைவேத்யம் செய்து பின்னர் சாப்பிடலாம். இன்று சித்ரான்னங்கள் செய்யலாம்.
ஆவணி மாதம்
• பொங்கல் இருப்பவர்கள் ஆவணி மாதத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடவேண்டும்.
• காலை சூரிய கதிர் விழும் இடத்தில்,சுவற்றில் சூரியன்,சந்திரனை செம்மண்ணால் வரையவும். பொங்கலில் இருந்து "ஒடுக்கு சாதம் " பிடித்து வைக்கவும்.
• இனிப்பு அடை ,அதற்கு தேங்காய் பூ,முழு தேஙகாய், வாழை பழம் 2, வெற்றிலை பாக்கு வைத்து பூஜை செய்யவும். 12/36 சூரிய நமஸ்காரம் செய்யவும். முடிந்தவர்கள் 108 செய்யலாம். செவ்வரளி பூவால் பூஜை செய்வது விசேஷம்.
• ஆவணி மாதம் சுக்கில பட்ச சதுர்த்தி தினத்தன்று (அமாவாசை கழிந்த 4ம் நாள்), விநாயக சதுர்த்தி கொண்டாடப்படும்.
பூஜை:
• பூஜை அறையில் சுத்தமான மனைபலகை ஒன்று வைத்து அதன் மேல் கோலம் போடவும்.அதன் மேல் தலைவாழை இலை ஒன்றை நுனி வடக்கு பார்த்து இருக்கிற மாதிரி வைத்து அதன் மேல் கொஞ்சம் பச்சரிசியை பரப்பி புதிதாக வாங்கி வந்த களிமண் பிள்ளையாரை அரிசிக்கு நடுவில் வைக்கவும்.
• இருபுறமும் வாழைக்கன்று வைத்து கட்டவும். மாவிலை தோரணம் கட்டி பிள்ளையாரை அருகம்புல், எருக்கமாலை மற்ற புஷ்பங்களால் அலங்காரம் செய்யவும்.
• பிள்ளையாருக்கு முன் நைவேத்தியப் பொருள்களை வைக்கவும். தேங்காய்
பழம்,வெற்றிலை பாக்கு,பூ,தட்டில் வைக்கவும். விநாயகர் அகவல் போன்ற துதி
பாடல்களை பாராயணம் செய்து தூபம், தீபம் காட்டி பூஜை செய்யவும்.
நைவேத்தியம் மற்றும் பூஜைக்கான பொருள்கள்:
• பயறு, கொண்டைக்கடலை சுண்டல், வாழைக்காய், சேனைக்கிழங்கு வறுவல், இட்லி, உளுந்து வடை, இனிப்பு கொழுக்கட்டை, அப்பம், எள்ளுருண்டை, கடலை உருண்டை, கைமுறுக்கு, தேன்குழல் , இட்லி, வடைமேல் சிறிது நாட்டுச் சர்க்கரை வைத்து நெய் விடவும்.
• பல வகையான பழங்களை ஒரு தட்டில் வைக்கவும்,குறிப்பாக விளாம்பழம், நகப்பழம், பொரி, கடலை,அவல்.
• மறுநாள் வடை பாயசம் நைவேத்தியம் செய்து மறுபூஜை செய்யவும். மாலை பிள்ளையாரை கிணறு, ஆறு, ஏரி, குளம், கடல் இவற்றில் விடவும்.
புரட்டாசி
• புனிதம் மிகுந்த புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி விழாவாகும். பத்தாம் நாள் விஜயதசமி ஆகும். பெண்களுக்கான விழாக்களில் இதுவும் ஒன்றாகும்.
• இச்சமயம் 5அல்லது 7 அல்லது 9 படிகளில் கொலு வைத்து அம்பாளை வழிபாடு செய்யவும். தினசரி மாலை சுண்டல் நைவேத்தியம் செய்து லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து பூஜை செய்ய வேண்டும்.
• இவ்விழாவினை கொண்டாடினால் வீடும் நலம் பல பெற்று, குழந்தைகளின் கல்வியறிவு சிறப்புறுகிறது.
• இன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து கதவு , பீரோ, பாடப்புத்தகங்கள், சங்கீத கருவிகள் போன்ற எல்லாப் பொருள்கள் மீது விபூதி, சந்தனம், குங்குமமிடவும்.
• பூஜையறையில் வாழைக்கன்றுகள் கட்டவும். மாவிலை தோரணம்,வீட்டு வாயிலில்,பூஜை அறை வாயிலில் கட்டவும்.
• சரஸ்வதி படத்தை அலங்கரித்து படங்களுக்கு முன்னால் ஒரு மனை பலகையில் குழந்தைகளின் பாடப்புத்தகங்களை அடுக்கவும். அதன் மீது வெள்ளை வஸ்த்திரம் சாத்தவும்.
நைவேத்தியம்:
• பயறு, கொண்டைகடலை சுண்டல், வாழை சேனை வறுவல், இட்லி, உளுந்து வடை, நாட்டுச்சக்கரை, தேங்காய் பூ, பழம், எள்ளுருண்டை, கடலை உருண்டை, கை முறுக்கு, தேன்குழல், பொரி , கடலை ஆகிய எல்லாவற்றையும் ஒரு தட்டில் நுனி இலை வைத்து, அதில் பரிமாறி படத்தின் முன் வைக்கவும்.
• தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, பூக்கள் வைக்கவும். பவழமல்லி உபயோகிக்க கூடாது.
• பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் மீது ஸ்தோத்திரப்பாடல்கள் பாடவும்.தூபம்,தீபம் காட்டி பூஜை செய்யவும்.
9) ஆயுத பூஜை:
• வீட்டில் கடையில் உள்ள தராசு, இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் சுத்தப்படுத்தி விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்து தேங்காய் உடைத்து பழம், வெற்றிலை, பொரிகடலை வைத்து பூஜை செய்யவும்.
10) விஜயதசமி:
• அடுத்த நாள் மூன்று தேவியர்க்கும் வடை பாயசம் நைவேத்தியத்துடன் மறு பூஜை
செய்ய வேண்டும். குழந்தைகளை பூஜையில் வைத்திருந்த பாடப்புத்தகங்களை எடுத்து
படிக்க சொல்லவேண்டும்.
இன்று பாரணை சாப்பாடு.