பாலக்காடு விற்றூணியார் கோவில்
நமது ஐந்நூற்றுவர் சமூகத்தை சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அவரவர் குல தெய்வக் கோவில்கள் தனியாக இருந்தாலும்
நம் சமூகத்தை சேர்ந்த அனைவருக்கும் முழு முதற் கடவுளாய் விளங்கி அருள் பாலிப்பவர் பாலக்காடு ஸ்ரீ விற்றூணியார் ஆவார்.
திருமணம், வியாபாரம் என்று எந்த ஒரு காரியத்தைத் துவங்குவதாக இருந்தாலும் பாலக்காடு விற்றூணியாரை வழிபட்டுவிட்டுத் துவங்குவது
நமது சமூகத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். பத்திரிகை, புதுக் கணக்கு என்று எதுவானாலும்
"ஸ்ரீ விற்றூணியார் துணை" என்று ஆரம்பிப்பதுதான் நமது வழக்கம்.
இதனால், நமது சமூகத்தை சேர்ந்த அனைவரும், குல தெய்வக் கோவில்களுக்கு வருடம் தோறும் செல்வது போல
பாலக்காடு ஸ்ரீ விற்றூணியார் கோவிலுக்கும் தவறாது சென்று வழிபட்டு ஸ்ரீ விற்றூணியாரின் அருள் பெற்று
வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று உயர வேண்டும்.
பாலக்காடு:
அருள்மிகு ஸ்ரீ விற்றூணியார் தேவஸ்தானம்
விற்றுண்ணி ரோடு
நூரணி அஞ்சல்
பாலக்காடு - 678 004
Ph - 0491-2500704
விற்றூணியார் என பெயர்வரக் காரணம்:
ஐநூற்று செட்டியார்களுக்கு பாலக்காட்டில் உள்ள விற்றுாணி விநாயகர் குலதெய்வம் போன்று போற்றப் படுவதாகத் தெரிகிறது.இப்பெயரே ஆராய்ச்சிக்கு உரியதாகும்.
பொருளை விற்று வாணிபம் செய்யும் செட்டிமார்களுக்கு தெய்வமாக இருப்பவர் பெயர்,
விற்ற + உணி விநாயகர்
என்று இருப்பது பொருந்தும்.
பொருளை விற்று அந்த ஊதியம் கொண்டு வாழ்பவர்கள் விற்று உணியார் என்று பெயர் பெறுவது பொருத்தம். உணியார் என்பதற்கு உண்பவர்கள் என்பது பொருளாகும். சொல் வழக்கில் விற்றுாணியார் எனப்படுவது விநாயகப் பெருமானையே குறிக்கும்.
(1999-ம் ஆண்டு சென்னை கே.ஏ.சீனிவாசன் அவர்கள் வெளியிட்ட பாலக்காடு அருள்மிகு விற்றுாணியார் திருக்கோயில் வரலாறும் வழிபாடும் என்ற நூலுக்கு சென்னை பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய வாழ்த்துரையிலிருந்து)
நன்றி - விற்றூணியார் கோவில் கும்பாபிஷேக மலர் - 01-11-2009
அருள்மிகு விற்றுாணி விநாயகர் திருக்கோயில்
தலவரலாறு
பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தற்போதைய ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், நம்பியூர் அருகிலுள்ள எம்மாம்பூண்டி எனும் ஊரில் திரு. சின்னாஞ்செட்டியார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் புகையிலை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். இவரது புதல்வர் திரு. குழந்தைவேல் செட்டியார் ஆவார்.
திரு. சின்னாஞ் செட்டியார் அவர்கள் இறைவனடி எய்தியதும், திரு. குழந்தைவேல் செட்டியார் தமது பதினெட்டாம் வயதிலேயே தமது தந்தையாரின் தொழிலை மேற்கொண்டார். தமது தீவிர உழைப்பின் பயனாக செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைந்தார்.
தமது தந்தையார் தோள் சுமையாக செய்து வந்த புகையிலை வியாபாரத்தை, ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதிமாடுகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, பாலக்காடு சென்று பெரிய அளவில் வியாபாரம் செய்தார். இச்சமயத்தில் அவருக்கு பெரும் பொருள் கிடைத்ததாக அறிகிறோம். இதன்மூலம் பெரும் பேரும் புகழும் பெற்றார்.
பாலக்காட்டில் இவர் தன் உற்ற நண்பர் அண்ணாமலை செட்டியாரின் துணையுடன் வியாபாரம் மட்டுமின்றி பல அறப்பணிகளையும் செய்து வந்தார். அச்சமயத்தில் அவர் தங்கியிருந்த இடம், தற்போது விற்றுாணியார் கோவிலின் அலுவலக அறையாகத் திகழ்கிறது.
ஒருநாள் குழந்தைவேல் செட்டியார் அவர்கள் பகலுணவு முடித்து அயர்ந்து உறங்கிய வேளையில், ஒரு சிறுவன் வந்து
“அப்பனே! நான் உன் அருகிலேயே குடியிருக்கிறேன். என்னை வந்து பார்க்கவில்லையே, ஏன்?”
என்று கேட்க, சட்டென விழித்தெழுந்தார். ஒருவரையும் காணாது திகைத்தார். இதனை எண்ணி வியந்தவாறே இரவு உறங்கச் சென்றார்.
உறங்கிய சற்று நேரத்திற்கெல்லாம், பகலில் வந்த அதே சிறுவன், செட்டியாரை அழைத்துச் சென்று இப்பொழுது விற்றுாணி விநாயகர் எழுந்தருளியுள்ள இடத்தைக் காட்டினார். ஒலை வேய்ந்த சிறிய இடத்தில் விநாயகர் எழுந்தருளி இருந்தார். உறக்கம் கலைந்து எழுந்த குழந்தைவேல் செட்டியார் கண்டது கனவு என உணர்ந்தார்.
மறுநாள் அதிகாலை எழுந்து நீராடி கனவில் கண்ட இடத்திற்குச் சென்றார். கனவில் கண்ட அதேபோல் விநாயகப் பெருமானைக் கண்டு மகிழ்ந்தார். விநாயகரின் திருவருளை எண்ணி உள்ளம் உருகினார். கனவில் வந்த சிறுவன் விநாயகப் பெருமான் என உணர்ந்து மிக்க மகிழ்ந்தார். விநாயகப் பெருமானுக்கு கோவில் கட்டிட முடிவு செய்தார்.
கோவில் கட்ட தீவிர முனைப்புடன் செயல்படத் துவங்கினார். அந்த இடம் தமக்கு உதவியாக இருந்துவரும் நண்பருக்குச் சொந்தமானது என அறிந்து அவ்விடத்தை 300 வராகன் கொடுத்து வாங்கினார்.
அவ்விடத்தில் பெரிய கோவில் எழுப்பி நல்ல நாளில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்து வழிபடத் துவங்கினார். கோவில் கட்டியது முதல் குழந்தைவேல் செட்டியார் அவர்களின் தொழில் பெருமளவு முன்னேற்றம் அடைந்து அதன் மூலம் அவருக்கு பெரும் வருவாயும், பேரும் புகழும் பெருகியது.
திருக்கோயிலின் தினசரி வழிபாட்டிற்கு நிரந்தரமாக வழி செய்திட நன்செய்நிலங்களுக்கு வழிவகை செய்ய எண்ணினார். அதற்கும், விநாயகப் பெருமானே வழிகாட்டினார்.
மைசூர் மன்னனின் நட்பு
மைசூரை ஆண்ட ஹைதர்அலியும் அவரது மகனான திப்பு சுல்தானும் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வந்தனர். பலமுறை போரிட்ட நிலையில், நிதிப்பற்றாக்குறை ஏற்பட, தம் குடிமக்களில் யாரேனும் பொருள் தந்து உதவும் நிலையில் உள்ளனரா என விசாரித்து எம்மாம்பூண்டியில் குழந்தைவேல் செட்டியார் என்று ஒரு பெருவணிகர் இருக்கிறார் அவரைக் கேட்டால் ராணுவச்செலவுக்குப் பணம் கிடைக்கும் என்று அறிந்தார்.
உடன், மன்னர் குழந்தைவேல் செட்டியாரை சந்திக்க விரும்பி அதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி திப்பு சுல்தான் மைசூரிலிருந்து பாலக்காடு வரும் வழியில் சேவூர் அருகே உள்ள தண்டுக்காரன் பாளையத்தில் குழந்தைவேல் செட்டியாரை சந்தித்தார்.
மன்னர் வருகையின் நோக்கத்தை அறிந்த குழந்தைவேல் செட்டியார், ராணுவ செலவுக்குப் பொருள் தர இசைந்தார். மன்னர் செட்டியாரிடம் “எவ்வளவு பணம் தங்களிடத்தில் உள்ளது?” என வினவினார். அதற்கு செட்டியார் எம்மிடம் உள்ள நாணயங்கள் கொண்டு, என் வீட்டிலிருந்து தங்கள் அரண்மனை வரை சால் விட்டுச் செல்லலாம் என பதிலுரைத்தார். மன்னர் இதைக்கேட்டு, “இத்தகைய செல்வந்தரை இதுவரை நான் கண்டதில்லையே” என்று வியந்து, செட்டியாரிடமிருந்து வேண்டிய பொருள் பெற்றுச் சென்று ஆங்கிலேயரோடு மீண்டும் போரிட்டு வெற்றியும் கண்டார்.
மைசூர் அரண்மனையில் கோலாகலமாக வெற்றிவிழா நடந்தது. அதில் கலந்துகொள்ள திரு.குழந்தைவேல் செட்டியார் அவர்களுக்கு சிறப்பு அழைப்பு வந்தது. அவரை முக்கிய விருந்தினராக ஏற்று சிறப்பித்தார் மன்னர்.
பின்னர் ஊர் திரும்பும் போது, தமக்குச் செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக என்ன வேண்டும் என மன்னர் கேட்க, செட்டியார் அவர்கள் பாலக்காடு விற்றுாணியாருக்கு நித்திய பூஜைகள் நிரந்தரமாக நடைபெற நன்செய் நிலங்கள் தேவை என்று தெரிவித்தார்.
மன்னரும் மகிழ்வுடன் தாமே பரிவாரங்களோடு விற்றுண்ணிக்கு வருகைதந்து வேண்டிய அளவு நிலங்களுக்கு எல்லை காட்டுமாறு வேண்டினார். செட்டியார் அவர்கள் எல்லை காட்ட, அப்போதே அவற்றை விற்றுாணியார் பெயரால் பட்டா செய்து “ ஸ்ரீ விற்றுாணியார் தேவஸ்தம்” தேவசம்) ஜம்மி எனும் பெயர் தந்து விடைபெற்றார்.
அப்போது பெற்ற நிலங்கள் தற்போதுள்ள வயல் நிலங்களும், தென்வடலில் கோட்டை வரையிலும், தற்போதுள்ள கடைத்தெரு வரையிலும் என்று கூறுவர். (கால மாறுபாட்டாலும், கேரளத்தின் சட்டங்களாலும் பாதிக்கப்பட்டு எஞ்சிய நிலங்களே தற்போது உள்ளன.)
இதன்பின்னர். ஐநூற்றுவர், எம்மாம்பூண்டியார் வகையினர் என்று பெருமிதத்துடன் கூறிவந்தனர். ஐநூற்றுச் செட்டியார்கள் பலரும், வியாபார நிமித்தம் பாலக்காடு சென்று பலமாதங்கள் தங்கி வந்தனர். தேவஸ்தான காரியங்களில், செட்டியாருக்கு உதவியாக இருந்து வந்தனர். பின்னர், ஸ்ரீ விற்றுாணியார் தேவஸ்தானம் எம்மாம்பூண்டி ஐநூற்றார்கள் மேற்பார்வைக்கு வந்தது. ஐநூற்றார் அனைவரும் சேர்ந்து அமைத்த நிர்வாகக்குழு இந்த தேவஸ்தானத்தை பராமரித்து வருகிறது.
1918-ம் ஆண்டில் திருக்கோவிலுக்குச் சொந்தமாக 120 ஏக்கர் விளைநிலம் இருந்ததாக அப்போதைய நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்த பெ.சா.ந.சாமுசெட்டியார் அவர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1995-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இன்று திருக்கோயிலும், அதைச் சுற்றியுள்ள சில குறுகிய இடங்களும், மடம், சில கட்டிடங்கள் சுமார் 2 ஏக்கர் பரப்புள்ள திருக்குளமும் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைவேல் செட்டியார் விநாயகப் பெருமானுக்கு கோயில் அமைத்தார். அவரின் வழிவந்தவர்கள், காசி சென்று அங்கிருந்து சிவலிங்கம் கொண்டுவந்து, ஸ்ரீ விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதரை பிரதிஷ்டை செய்வித்தார்கள்.
காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு தேக்கு மரத்தால் கட்டுக் கோப்பு வேய்ந்து பெ.ச.மாரப்ப செட்டியார் திருப்பணி செய்தார்.
பின்னர் இன்றைக்கு 165 ஆண்டுகளுக்கு முன்பு கருணைபாளையம் திரு. சுப்பராய செட்டியார் அவர்கள் ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணிய பெருமான் கோவிலைக் கட்டுவித்தார்.
ஏறக்குறைய95 ஆண்டுகளுக்கு முன்பு, வேலம்பாளையம் ஏ.கே. பொன்சிவளை செட்டியார் அவர்கள் நவகிரஹ பிரதிஷ்டை செய்வித்தார். பின்னர் 1968-ல் நடைபெற்ற கும்பாபிஷேக விழா சமயத்தில் சனீஸ்வர பகவான் சன்னதி அமைக்கப்பட்டது.
முழுமுதற் கடவுளான விநாயகரை மனதிற் கொண்டே அனைத்து செயல்களும் துவங்கப்படுவது மரபு.
எனவேதான், நமது குலத்தவர் எச்செயல் துவங்கினாலும் , ஸ்ரீ விற்றூணியார் துணை என துவங்குகிறோம். திருமணப் பத்திரிகை எழுதும்போதும் முதல் பத்திரிகை ஸ்ரீ விற்றூணியார் கோவிலுக்கு தான் எழுதுகிறோம். தொழில் துவங்கினால் ஸ்ரீ விற்றுணியார் வரவு வைத்தே புதுக் கணக்கு ஆரம்பிக்கின்றனர்.