திருமணத்திற்க்குப் பின்
1) மணமகளை மணமகன் வீட்டுக்கு அழைத்துச் செல்லுதல்
2) மணமகன் வீட்டில் நடக்கும் சீர்கள்
6) தலை தீபாவளி/ இரண்டாவது தீபாவளி
1) மணமகளை மணமகன் வீட்டுக்கு அழைத்துச் செல்லுதல்:
மணமகனும், மணமகளும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றபின் மணமகன் வீட்டார், புதுமணத்தம்பதிகளை, தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுவார்கள். புதுமணப் பெண்ணுடன் அவர்கள் வீட்டு பெண்களுள் ஒருவர் செல்வர்.
2) மணமகன் வீட்டில் நடக்கும் சீர்கள்:
• மணமக்கள், மணமகன் வீட்டை அடைந்ததும் அவர்களுக்கு இரு பெண்கள் ஆலாத்தி எடுத்த பின்னர், மணமகள் வலது காலை எடுத்து வைத்து மணமகன் வீட்டிற்குள் செல்வாள்.
- உள்ளே சென்று பாத்திரங்களில் வைத்துள்ள உப்பு, புளி இவைகளை தொடுவாள். பின்னர் தயிர் கடைவாள். மஞ்சள் அரைப்பாள்.
• பின்பு 4 பெண்களுடன் குடிகிணற்றுக்குப்போய் தண்ணீர் கொண்டு வருவாள். மணமகள் தான் புகுந்த வீட்டில் செய்யும் முதல் வேலை சீர்த்தண்ணிக்குப்போய் வருதல் ஆகும்.
• பின்பு அடுத்த நாள் மத்தியானம் சாப்பிட்ட பின்பு, மணமகளுடன் வந்தவர்கள், மணமக்களை மணமகள் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். நான்கு அல்லது ஐந்து நாட்கள் கழித்து மறுமூச்சு. மணமக்களை மணமகன் இல்லத்துக்கு அழைத்து வருவார்கள்.
- மணமகன் வீட்டில் மடைக்கலப்பானை பொங்கலிடுவார்கள்.
• அதுபோலவே மணமகள் வீட்டிலும் மணமக்கள் இருக்கும் போது மடைக்கலப்பானை பொங்கல் வைப்பார்கள்.
• மணமகன் வீட்டு குலதெய்வக் கோவிலுக்கு தம்பதியரை அழைத்துப் போய் திருமணப் பொங்கல்' வைப்பார்கள். அபிஷேகம் பூஜை செய்வர்.
• அதுபோலவே மணமகளின் வீட்டுக் குலதெய்வக் கோவிலுக்கு தம்பதியரை அழைத்துப்போய் திருமணப் பொங்கல் வைத்து அபிஷேகம் பூஜை செய்வார்கள்.
• மணமகன் வீட்டில் ஒரு வெள்ளிக்கிழமை மணமகளுக்கு . மங்களஸ்நானம் செய்வார்கள். அன்று பங்காளிகளுக்கும், மாமன் மைத்துனர் மற்றும் உறவினர்களை அழைத்து அன்று கச்சாயம் அல்லது ஒப்புட்டு தேங்காய் போளி பலகாரத்துடன் விருந்து வைப்பார்கள்.
• . மணமகள் வீட்டிலும் ஒரு புதன் கிழமை மணமகனுக்கு மங்கள ஸ்நானம் நடத்தி மைத்துனர்கள் மற்றும் உறவினர்களையும் அழைத்து விருந்து வைப்பார்கள்.
- மணமக்களைக் கோவிலுக்கு அழைத்துப்போய் தெய்வவழிபாடு நடத்துவார்கள்.
• வியாழன் அல்லது ஞாயிற்றுக் கிழமை, தம்பதிகளுக்கு அருமைக்காரியைக் கொண்டு “தண்ணி சுத்தி” திருஷ்டி தோஷம் போக்குவர்கள் இதை இரு அருமைக்காரிகள் செய்வார்கள்.
• பருத்தி கொட்டை, மிளகாய் வற்றல், உப்பு, வேப்பிலை, சிறிது முக்கூட்டு மண் (மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தில் எடுத்த மண்) ஒரு தட்டில் மஞ்சள் கரைத்த நீர், சிறிய மண்சட்டி, மூன்று கனத்த திரி, நெருப்பு தணல் ஆகியவைகளை சேகரித்து வைத்து ஊர் அடங்கியபின் புதுமணத் தம்பதியரை இருமனைகளில் கிழக்கு முகமாக உட்காரவைத்து முதலில் மூன்று திரிகளை ஒவ்வொன்றாக ஏற்றி இடமிருந்து வலமாக இருவரின் தலைக்கு மேல் மூன்றுமுறை சுற்றி, பிறகு மூன்று முறை வலமிருந்து இடமாக மூன்றுமுறை சுற்றி, மஞ்சள் தண்ணிர் உள்ள தட்டில் வைப்பர்.
• பின்பு சட்டியில் நெருப்புத் தணலைப்போட்டு பின் பருத்திக் கொட்டை, மிளகாய், முக்கூட்டு மண், வேப்பிலை, உப்பு ஆகியவைகளைப் போட்டு, அதை மஞ்சள் தண்ணீருள்ள அந்தத் தட்டை தம்பதியரின் தலைக்குமேல் மூன்றுமுறை இடம்-வலம் மாற்றி மாற்றி சுற்றியபின், சட்டியை முச்சந்தியில் உடைப்பர். இதனால் திருஷ்டி மற்ற தோஷங்கள் பீடைகள் நீக்கப்படுகின்றன. இதனை "தண்ணீர் சுத்தல்" என்பர்.
• ஒரு நல்ல நாளில் பெண் வீட்டில் சாந்தி முகூர்த்தம் நடத்துவார்கள்.
• மணமகன் (மாப்பிள்ளை) மாமனார் வீட்டில் முன்காலத்தில் 'மறுகலம்" இருந்து விருந்து உபசாரத்தோடு மகிழ்ந்து இருப்பார். அப்போது பங்காளிகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், மணமக்களைத் தத்தம் இல்லங்களுக்கு அழைத்து விருந்து வைப்பார்கள்.
• தற்போது மணமகன் ஒரு சில நாட்கள் மாமனார் வீட்டில் விருந்து உபசாரத்தில் மகிழ்நது பின்னர் மாமனார் மாமியாரிடம் சொல்லிக்கொண்டு, மணமகன், இல்லாளுடன் "தன்வீடு” திரும்புவார்.
• மூன்று மாதத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து மணமகளுக்கு திருமாங்கலியசரடு மாற்றுவார்கள்.
மூன்றாவது மாதத்தில் மணமகளின் தாய், தந்தையர் பங்காளிகளுடன் மிகவும் நெருங்கிய பந்துக்களுடனும் பலகார பட்சணங்களுடன் மணமகன் இல்லத்துக்கு செல்வார்கள். அன்று மணமகன் வீட்டார் சிறப்பாக விருந்து வைத்து உபசரிப்பார்கள். இதையே “சம்பந்தம் கலக்குதல்" என்பார்கள். தற்காலத்தில், திருமண நாளன்றே மாலையில் சம்மந்தம் கலக்கல் நடத்தி விடுகிறார்கள்.
திருமணம் ஆன மாதத்திலிருந்து ஒருவருடத்தில் வரும் பண்டிகைகளுக்கு மாப்பிள்ளை பெண்ணை, மணமகள் வீட்டார் யாரேனும் வந்து அழைத்துப்போய் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
ஆடி நோன்பு, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை (மாக நோன்பு, தீபாவளி, திருக்கார்த்திகை, திருவாதிரை, தை நோன்பு, சிவராத்திரி, யுகாதி) ஆகிய முக்கிய பண்டிகைகளுக்கு புதுமணத்தம்பதியரை மாமனார் வீட்டுக்கு அழைத்து சிறப்பிப்பார்கள்.
6) தலை தீபாவளி/ இரண்டாவது தீபாவளி:
முதல் தீபாவளிக்கு பட்டுவேஷ்டி, பட்டு அங்கவஸ்திரம், தங்க மோதிரம் அல்லது செயின், ஷர்ட் இவைகளை ஒரு அருமைக்காரரைக் கொண்டு மாப்பிள்ளைக்கு மாமனார் வீட்டில் வைத்துக் கொடுப்பார்கள் மணப்பெண்ணுக்கும் பட்டுப்புடைவ, பட்டு ரவிக்கைத்துண்டு வைத்துக் கொடுப்பார்கள்.
இரண்டாவது தீபாவளிக்கும் புடவை, ரவிக்கை, வேஷ்டி வைத்துக் கொடுப்பார்கள். இதன் பின்னர் பதுமாப்பிள்ளை - பழைய மாப்பிள்ளை ஆகிவிடுவார்.