திருமண நாள் – முகூர்த்ததிற்க்குப் பின்
8) 8) நாகவல்லி (நாளாணைத் தண்ணிவார்த்தல்)
9) மணமகள் மணமகனுக்கு சட்டுவச்சாதம் போடுதல்
10) கரகம் நகர்த்தி – பரியம் செலுத்துவது
16) மணமகளுக்கு தாயார் அன்னமிடல்
மணமகனின் தமக்கையோ அல்லது தங்கையோ சிறப்பாக அலங்காரம் செய்து பூ நிறைய வைத்துக் கொண்டு அவளுடைய நங்கை அல்லது கொழுந்தியாருடன், ஒரு பேழை மூடியில், சிகப்புப்பட்டு, எழுத்தாணி வைத்து எடுத்துக்கொண்டு மணவறைக்குள் சென்று அருமைக்காரரின் உதவியுடன் சிகப்புப்பட்டையும், எழுத்தாணியையும் இருகைகளாலும் சேர்த்து பிடித்து மூன்றுமுறை பிள்ளையாருக்கு “இணை” ஓங்கியும், மணமகனுக்கு 3 முறை “இணை” ஓங்கியும், மணமகளுக்கு 3 முறை “இணை” ஓங்கிசீர் செய்துவிட்டு மணமகள் தலையில் ஒரு குட்டு வைப்பாள். இணைக்காரிக்கு ஒரு தேங்காய், ஒரு சீப்புப்பழம், ரூபாய் கொடுப்பார்கள்.
மணமகளின் தம்பிக்கு (அப்படி இல்லாவிடில் பங்காளி அல்லது தாயாதிகளில் சகோதரத்துவம் வாய்ந்த சிறுவயதுள்ளவனுக்கு) சிறப்பாக அலங்காரம் செய்து கழுத்துக்கு, 3 சங்கிலி அணிவித்து அவனைத் தோழனால் அழைத்துக்கொண்டு முன்செல்ல கைவீசுக்காரன் பின் சென்று மணவறையை வலம் வந்து மணவறைக்குள் சென்று அருமைக்காரரின் உதவியுடன் புதுமணத்தம்பதிகளுக்கு முன்னால் ஒரு முக்காலியில் உட்கார்ந்து தாம்பாளத்தில் உள்ள சோளப்பொரியை இருகை நிறைய எடுத்து மணமகன் கைகளையும் மணமகள் கைகளையும் ஒன்று சேர்த்து, அதில் கைவீசுக்காரன் மூன்றுமுறை பொரி அள்ளச் சொல்வான். பின்னர் மணமகனுக்கு ஒரு குட்டு வைப்பான். கைவீசுக்காரனுக்கு ஒரு தேங்காய், ஒரு சீப்புப்பழம், ரூபாய் கொடுப்பார்கள்
• மணமகளின் தந்தை, தாயார் ஒரு கெண்டியில் தண்ணீருடன், மணவறைக்குள் வந்து வடக்குப்பார்த்து ஒன்று சேர நிற்க வேண்டும்.
• மணமகனும் மணமகளும், அவர்களின் பாதங்களுக்கு தண்ணீர் விட்டு,சந்தனம், குங்குமம் பொட்டுவைத்து புஷ்பம் வைத்து ஒவ்வொருவர் காலிலும் நாணயம் வைத்து, "பாதபூ ஜை செய்வர்.
• பின்னர், மணமகள் கை மேலும், மணமகன் கை கீழேயும் வைத்து, புரோகிதர் மந்திரம் சொல்ல மணமகளின் தாய்தந்தையர் இருவரும் கெண்டியைப் பிடித்துக்கொண்டு ஜலத்தால் மணமகளை, மணமகனுக்கு தாரைவார்த்து கொடுப்பார்கள்.
• புரோகிதர் முதலில் பிள்ளையாருக்கு அருகுமணம் எடுத்துப்பின்னர், புதுமணத் தம்பதியர்களுக்கு அருகுமணம் எடுத்து ஆசீர்வதிப்பார்.
• பின்னர் அருமைக்காரர்களும் அதுபோலவே அருகுமணம் எடுத்து தம்பதிகளை ஆசீர்வதிப்பார்கள்.
புதுமணத்தம்பதிகளுக்கு, தங்கம், வெள்ளி, பரிசுப்பொருள்கள் பணம் இவைகளை பந்துக்களும் நண்பர்களும் கொடுக்க, புரோகிதர் அவரவர்கள் பெயர் சொல்லி ஓதி வைப்பார்.
• இரண்டு அருமைக்காரிகள் ஆலத்தி கொண்டுவந்து, சுற்றி பின்னர் வெளி வாசலில் விட்டு விடுவார்கள்.
• பின்பு மணமகனின் வலதுகையையும் மணமகளின் வலது கையையும் ஒன்று சேர்த்து சிகப்பு பட்டு வஸ்திரத்தால் மூடி சுற்றப்பட்டு மாப்பிள்ளைத்தோழன் வழிகாட்ட புதுமுணத்தம்பதியர் மணவறையை வலமாக வந்து வீட்டுக்குள் சென்று கல்யாண விளக்கை நமஸ்கரித்து நிற்பார்கள்.
புதுமணத்தம்பதி, திருமணத்திற்கு வந்திருக்கும் பெரியவர்களின் கால்களைத் தொட்டு நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெறுவார்கள்.
மணமக்கள் திருக்கோவில் வழிபாடு
• திருமணமானவுடன், தம்பதியர் ஒன்றாக் சேர்ந்து முதலில் கோவிலுக்குச் சென்று முறையாக எல்லாச் சந்நிதிகளிலும்
அர்ச்சனை ་ செய்து பிரசாதம் பெற்று இறைவன் அருளுக்கு பாத்திரமாவார்கள்.
• கோவிலுக்கு வந்த பந்துக்களில் "செட்டுக்காரர்" யாரேனும் இருந்தால் அவர்களுக்கு முதலில் தேங்காய் கொடுத்துவிட்டு மற்ற பந்துக்களுக்கு மணமகள் - மணமகன் வீட்டார்கள் தங்கள் கொண்டுவந்த தேங்காய்களை கொடுப்பார்கள். அவைகளை, கோவிலின் முன்பக்கம் சிதர்காய் போடச் செய்வார்கள்.
• பின்னர் திருமண தம்பதியர் காரில் மண்டபம் அடைவார்கள். ஆலாத்தி எடுத்த பின்பு மணமக்கள் திருமண மண்டபத்துக்குள் மாப்பிள்ளைத் தோழன் தோழியருடன் செல்வார்கள்.
மணப்பெண் வீட்டார், தங்கள் குடும்பத்தின் (பழைய) முந்தய மாப்பிள்ளைக்கும், புது மணமகனுக்கும் கிளைப்பணம் வைப்பார்கள். முதலில் பெண்வீட்டு நங்கையார் மாமியார்கள் மணமகனுக்கு பணம் வைத்து நமஸ்காரம் பெறுவார்கள். பின்னர் பெண்வீட்டு பந்துக்களும் தாயாதிகளும் ஆன பெண்களில் நங்கையார் மாமியார் முறை உள்ளவர்கள் மணமகனுக்கு பணம் வைத்து நமஸ்காரம் பெறு வர்.
இ து ஒரு அறிமுக நிகழ்ச்சியாகும். அன்று முதல் மணமகன் அவர்களை உயர்திணையில் அழைக்க வேண்டும்.
காப்புக்கழிதல்:
தி ருமணத்தம்பதியர்களை மணவறைக்கு அழைத்து வந்து அமரச்செய்து, மணமகனுக்குக் காப்புக்கட்டிய ஒரு அருமைக்காரர்வந்து, ஒரு தட்டில் காப்புக்கட்டிய அரிசி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு இவைகளை மணமகன் முன்னர் வைத்து, மணமகனை இருகைகளாளும் 3 தடவை அரிசியை அள்ளிவிட்டுவிடச் சொல்லி, நான்காம் முறை அள்ளச் சொல்லி அதன்மேல் தேங்காய் பழம் வைத்து, காப்பை அவிழ்த்து பிள்ளையார் அருகில் வைக்க வேண்டும். அதுபோலவே, மணமகளுக்கு காப்புக்கட்டிய அருமைக்காரர் ஒருவர், முறையாகச் செய்து மணமகளின் காப்பை அவிழ்த்து பிள்ளையார் அருகில் வைப்பார்.
மணமகன் வீட்டார் தாங்கள் கொண்டுவந்திருக்கும் சிறுசீர் சாமான்களான பழம், தேங்காய்கள், வெற்றிலைபாக்கு, சுக்கு, மிளகு, வெள்ளைப்பூண்டு, உப்பு, வெல்லம் முதலியவைகளை அழகாக தட் டங்களில் வைத்து அவைகளை மணமகன் வீட்டுபெண்கள் , மணமகனுடன் வாத்தியக்காரர்கள் வாசித்துக்கொண்டு முன்செல்ல, திருமண மண்டபத்துக்கு வந்து வரிசையாக வைத்து, மணமகள் வீட்டாருக்கு கொடுப்பார்கள். மணமகள் வீட்டாரும் மற்ற பந்துக்களும், அங்கு வைத்துள்ள சீ ர் சாமான்களைப்பார்த்து “போதாது" என்றும் "குறைவு” என்றும் வேடிக்கைக்காகப் பேசுவர். இவ்வாறு மணமகன் வீட்டார் கொண்டுவந்து கொடுத்ததை மணமகள் வீட்டார் உள்ளே எடுத்துச் செல்வார்கள். இந்தச்சீருக்குத்தான் 'சிறுசீர் என்பார்கள்.
8) நாகவல்லி (நாளாணைத் தண்ணிவார்த்தல்):
திருமணத்துக்கு முன்பு, மணமகன், மணமகள் இருவருக்கும் தனித்தனியே மங்கள நீராட்டு, அருமைக்காரியால் நடத்தப்பட்டது போலவே, மணமகன், மணமகள் இருவரையும் இரண்டு முக்காலிகளில் உட்காரவைத்து, மணமகளுக்கோ மணமகனுக்கோ மங்கள ஸ்நானம் செய்வித்த அருமைக்காரிதான், புதுமணத் தம்பதியருக்கு கஞ்சிவைத்து ஒரு ஸ்நானமும் எண்ணை வைத்து ஒரு ஸ்நானமும் ஆக இரண்டு ஸ்நானம் செய்விப்பார். பின்னர் 'சீடையினால், பீடைகளின் பரிகாரம் நீக்கப்படுகிறது. அதற்குபின் பலிச்சாதம் கொண்டு திருஷ்டி தோஷங்கள் கழிக்கப்படுகின்றது. சீடைபரிகாரத்தின்போது, சீடையை எழுத்தாணியுடன் சேர்த்து பிடித்து, பீடைகழிக்கப்படுகிறது.
குறிப்பு முன்னர் இந்த நாகவல்லி வைபவத்தை திருமணத்தில் மிகமுக்கிய நிகழ்ச்சியாக, தவறாமல் செய்து வந்தனர். கல்யாணம் விசாரிக்கப் போகிறவர்கள், முகூர்த்தம், நாகவல்லி எல்லாம் எப்படி நடந்தது என்று விசாரிப்பார்கள். தற்காலத்தில் ஒருசிலர் நாகவல்லியை விடாமல் சிறப்பாகச் செய்கிறார்கள். ஒருசிலர் என்ன காரணத்தினாலோ நாகவல்லியை விட்டுவிடுகிறார்கள். நாகவல்லி வைபவம், ஊஞ்சல்' என்று பத்திரிகைகளில் போட்டுவிட்டு, நடத்தாமல் விட்டுவிடல் உசிதம் அல்ல. மேலும் இந்தச்சீர், புதுமணத்தம்பதிகளின், திருஷ்டி, பீடை . ஆகியவைகளை நீக்குவதற்காகவே பழங்காலத்திலிருந்து விடாமல் செய்து வந்தனர். ஆகவே இனிமேலும் இந்த சீரை விடாமல் செய்தால் மிக்க நலம். மேலும் நாகவல்லி ஆகும் வரை மணமகன் சிகப்புப்பட்டு வேஷ்டிதான் கட்டியிருக்கவேண்டும். இந்த சீர் ஆனவுடன் தான் வெள்ளை வேஷ்டி உடுத்திக்கொள்ளுவார்.
9) மணமகள் மணமகனுக்கு சட்டுவச்சாதம் போடுதல்:
இதுவும் திருமணச் சடங்குகளில் குறிப்பிடத்தக்கது. மாப்பிள்ளையை நடுவீ ட்டில் கிழக்கு முகமாக உட்காரவைத்து இலை போடுவார்கள், அவர் எதிரே மணமகள் பேழைமூடியில் நின்று, சட்டுவத்தால் சாதத்தை எடுத்துப் பரிமாறுவாள்.
10) கரகம் நகர்த்தி – பரியம் செலுத்துவது:
1 1/2 அடி சமசதுரமான வெள்ளைத் துணியை நன்றாக மஞ்சள் நீரில் நனைத்து அதில் பருத்திக்கொட்டை கொஞ்சம் வைத்து, மணமகன் வீட்டார் கொடுத்த பரியப்பணம் 45 ரூபாயையும் 25 பைசா நாணயத்தையும் சேர்த்து ஒரு தட்டில் வைத்து ஒரு தேங்காய், பழம் ஒரு சீப்பு, வெற்றிலைபாக்கு உடன் வைக்கவும், மணவறைக்குள், மத்தியில் 2 பக்கம் செம்மண்ணில் வழித்துவிட்டு, ஒன்றில் பிள்ளையாரும் மற்றதில் முக்காலியும் வைக்க வேண்டும். முக்காலியில் மேலே சொன்ன சாமான்கள் கொண்ட தட்டை வைக்க வேண்டும். இரண்டு அருமைக்காரிகள் கெண்டியில் தண்ணீர் கொண்டுவந்து பிள்ளையாருக்கு தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு வைத்து பூஜை செய்து, கெண்டியை கையில் எடுத்துக்கொண்டு, 3 தடவை அதைச்சுற்றி லேசாகக் கெண்டியிலுள்ள தண்ணியைவிட்டுகொண்டு, பின்னர் தட்டை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் போய்விடுவார்கள். இவ்வாறு பரியம் செலுத்தியபின் மணவறை பிரிக்கப்படும். திருமண விருந்து, மதியம் சிறப்பாக நடக்கும். பின்னர் ஊஞ்சலுக்கு ஏற்பாடு செய்வார்கள். .
ஊஞ்சல் பாட்டிற்க்கு "க்ளிக்" செய்யவும் -- > >
ஊஞ்சல் பாட்டு
மணமகனையும், மணமகளையும் நன்றாக அலங்காரம் செய்து சிறந்த மலர்மாலை அணிவித்து,
கைகளில் மலர்செண்டும் கொடுத்து ஊஞ்சல் கட்டி அதில் அமரச்செய்வர். ஊஞ்சலை லேசாக
ஆட்டிவிடுவர். அவர்களுக்கு முன்னால் ஆண்கள், பெண்கள் அனைவரும் அமர்வர். இரண்டு
பெரிய குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். ஊஞ்சலுக்கு மணமகன் வீட்டார்
கொண்டுவந்த வெற்றிலை, வாசனைப்பாக்கு பொட்டலங்கள். ஏலக்காய், கிராம்பு இவைகளைத்
தட்டில் வைத்து எல்லோருக்கும் கொடுப்பார்கள். பன்னீ ர் எல்லோருக்கும்
தெளிப்பார்கள். சந்தனம் பூச எல்லோருக்கும் கொடுக்க வேண்டும், நல்லமணம் உள்ள
ஊதுபத்தி நிறைய கொளுத்திவைத்து, ஊஞ்சல் நடக்கும் இடத்தை நறுமணம் கமழும்
இடமாக்கி மிக ரம்யமாக்குவார்கள்.
மணமகன் தோழன், மணமகனுக்கு, ஏலம், கிராம்பு வைத்து வெற்றிலை மடித்துத் தருவான். அதுபோலவே தோழியும் மணமகளுக்கு தாம்பூலம் மடித்துத்தருவாள். ஐநூற்றார் குலமணியே ஆடிரூஞ்சல் என்ற ஊஞ்சல் பாட்டை பெண்கள் ஒவ்வொன்றாகப்படிக்க, நாதசுரவித்வான் ஊஞ்சல்பாட்டு வாசிப்பான்.
மணமக்கள், வாழ்வில் எவ்வளவு ஏற்றமும் தாழ்வும் ஏற்பட்டாலும் ஒன்றாக இணைந்து இருக்கவேண்டும் என்பதை அறிவுறுத்தும் பொருட்டு ஊஞ்சலை ஆட்டிவிட்டு ஊஞ்சல் பாட்டு பாடி மணமக்களை மகிழ்விக்கிறார்கள்.
பந்து ஜனங்களுக்கும் திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் காலையில் இனிப்பு பலகாரம், காப்பி, மதியம் வடைப்பாயசம் இனிப்புடன் சிறப்பு விருந்து அளிக்கப்படும். விருந்துக்குப் பின்பு மொய் எழுதுவார்கள். பந்துக்களும் உறவினர்களும் மணப்பெண் வீட்டாருக்கும் தனியாகவும் மணமகன் வீட்டாருக்கும் தனியாகவும் "மொய் வைப்பார்கள் மணமகன் வீட்டாரின் மொய்ப்பணத்தை எண்ணி மணகமனின் தந்தையிடம் கொடுத்து விடுவார்க்ள. அதுபோலவே மணமகள் வீட்டாருக்கு “மொய்” வந்ததை எண்ணி மணமகளின் தந்தையிடம் கொடுத்து விடுவார்கள்.
• முன்பெல்லாம் மணமகனின் தாயார் திருமண முகூர்த்தம் நடக்கும் போது மணமகள் இல்லத்துக்கோ மண்டபத்துக்கோ வருவதில்லை, இந்தச் சம்பிரதாயத்தை நம் சமூகத்தில் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகிறார்கள். இது பிறசமூகத்தினரிடம் இல்லாத பழக்கம்.
• திருமண நிகழ்ச்சிகள் முடிவு பெரும்சமயம், மணமகனின் தாயார், நெருங்கிய உறவுக்காரப் பெண்மணிகளுடன், திருமண மண்டபத்தை அடைவார். அவர் வந்தவுடன் சம்மந்தி உபசாரம் நடக்கும். மணமகள் வீட்டார் பெண்காணும், சம்மந்திக்கு, அந்தஸ்த்துக்கு தக்கபடி விலை உயர்ந்த புடவை எடுத்துக் கொடுப்பார்கள்.
• மணமகனின் தாயார் விலை உயர்ந்த புடவையைக் கட்டி சந்தனம் கீரி அலங்காரம் செய்வர். மணமகளுக்கும் சந்தனம் கீரி அலங்காரம் செய்வர்.
• இருவருக்கும் சுருட்டிய மெத்தைகளை எதிர் எதிரே ஆசனமாகப் போடுவார்கள். மாமியார் ஒரு ஆசனத்தில் அமர்வார். மணமகள் மற்றொரு ஆசனத்தில் கைகூப்பிய நிலையில் தலை குனிந்து அமர்வாள்.
• மணமகன் தாயாருடன் வந்தவர்கள், மற்ற பெண்கள் எல்லாம் அவர்களைச் சூழ்ந்து உட்கார்ந்து இந்த நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கவனிப்பார்கள். மாமியார் தன் கைகளால் அன்னத்தை பழம் சர்க்கரையுடன் பிசைந்து மூன்று கவளங்களை தனது மருமகளுக்கு ஊட்டுவார்.
• பின்னர் மாமியாருக்கு பெண்கள் “மொய்” வைப்பார்கள். மணமகளை மாமியார் மருமகளாக ஏற்றுக் கொள்ளும் சடங்கே பெண்காணுதலாகும். தங்கள் இருவருக்கும் உள்ள நட்பை, ஒற்றுமையை, பாசத்தை இந்தச் சடங்கின்மூலம் எல்லோரும் காண தெரிவிக்கப்படுகிறது. இதையே "பெண் காணுதல்" "பெண் அழைத்தல்" என்றும் கூறுவர். அதாவது மாமியார் மணமகளை தன் வீட்டுக்கு அழைத்துப்போக வந்திருக்கிறாள் என்பார்கள்.
மணமகன் வீட்டார், பங்காளிகள் மற்றும் அவர்களின் உறவினர் கல்யாண மண்டபத்திலிருந்து, மணமகள் இல்லத்தாரிடம், போய் வருவதாகச் சொல்லிக் கொண்டு புறப்படுவார்கள். அப்போது மணமகள் இல்லத்தார், சாங்கியத்திற்காக மஞ்சள் நீரை, வேஷ்டியில், துண்டில், புடவைகளில் மிகக் கொஞ்சமாக தெளித்து வழி அனுப்பி வைப்பார்கள், முன்காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு பெரிய அளவில் மஞ்சள் நீரை மறைந்திருந்தும் ஊற்றுவர். எல்லாம் வேடிக்கைக்காகத்தான். ஆனால் சில சமயம் கட்டுமீறி விட்டதும் உண்டு. ஆனால் தற்காலத்தில் அமைதியாக சிறிய அளவில் சாங்கியத்திற்காக மஞ்சள் நீர் தெளிக்கிறார்கள்.
மணமகனுக்கு மாமியார் சர்க்கரையும் பழமும் இலையில் வைப்பார்கள். மணமகனும் உண்பது போல் பிசைந்து வைத்து விட்டு
எழுந்து விடுவார். பின்பு மணமகனுக்குப் பணம் வைத்துக் கொடுப்பார் மாமியார்.
16) மணமகளுக்கு தாயார் அன்னமிடல்:
மணமகளுக்கு தாயார் நுனி இலை போட்டு அதில் சாதம் வைத்து தயிர் விடுவார். பின்பு, மணமகளுக்குப் பணம் வைத்துக் கொடுப்பார்.