திருமண நாள் சீர்கள்
1) எழுதிங்கள்சீர் :
• ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகி 4 அல்லது 5 வருடங்கள் ஆனபின்பு, அந்தப்பெண்ணின் தாய் வீட்டில் திருமணம் வரும்போது அந்தப் பெண்ணுக்கு செய்யும் சீர்தான் "எழுதிங்கள் சீர்” என்று அழைப்பார்கள். சில சமயங்களில் அந்த பெண்ணுக்கு திருமணமாகி 10 அல்லது 15 வருஷங்கள் ஆனபின்னும் கூட இந்தச்சீர் பெற்றோரால் செய்யப்படும்.
• பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் புடவை சோமனும் (பட்டுப்புடவை பட்டு வேஷ்டி) குழந்தைகளுக்கு பட்டு சட்டை , பாவாடை கவுன் எடுத்து பெண்ணின் பெற்றோர் கொடுப்பார்கள். இந்த சீர் கல்யானத்தில், முகூர்த்தக்கால் போட்டபின் நடக்கும்.
• எழுதிங்கள் சீர் செய்யும் விருப்பத்தை தாயார் தன் பெண்ணுக்கு சொல்லி அவள் சம்மதித்தபின் இந்தசீர் நடைபெறுவது பற்றி திருமணப்பத்திரிகையில் “இன்னாருக்கு” எழுதிங்கள் சீர் நடக்கிறது என்று குறிப்பிடுவார்கள்.
• எழுதிங்கள் சீர் தம்பதிகளை, புதுமணத்தம்பதியர் போல் அலங்காரம் செய்வார்கள், சிகப்புப்பட்டு வேஷ்டியில் பஞ்சக்கச்சம் வைத்துக்கட்டி சந்தனம் கீரி சிகப்புத்துண்டு, போட்டு, உருமாலை வைத்து விபூதி பூசி, பொட்டுவைத்து ஆண்மகனை அலங்கரிப்பார்கள்.
• பெண்ணையும் புது மணப்பெண் போல் நன்கு அலங்காரம் செய்து மங்கள ஸ்நானம் செய்யுமிடத்திற்கு பந்துகக்கள் சுற்றத்தார் புடைசூழ அழைத்துப்போய் முக்காலிகளில் அமரச் செய்வர். அருமைக்காரிகள் இவர்களுக்கு (மணமக்களுக்கு மங்கள ஸ்நானம் செய்வித்தது போலவே) மங்கள ஸநானம் செய்து வைப்பபார்கள்.
• பிறகு புடவை சோமன் குழந்தைகளுக்கும் புத்தாடை அத்துடன் பணம் வைத்து பெண்ணின் பெற்றோர் கொடுப்பார்கள். பிறகு ஆனவர்கள் புத்தாடை அணிந்து கோவிலுக்கு போய் வழிபட்டுவருவார்கள்.
• பின்னர் அவர்களுக்கு பங்காளிகள் நெருங்கிய பந்துக்கள் எல்லாரும் பணம் வைத்துக் கொடுப்பார்கள். இந்ததம்பதியர் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் பெறுவார்கள்.
• இந்தச்சீர் செய்து கொண்ட பெண்மாத்திரமே, பிற்காலத்தில் தன் வீட்டு மகன் கல்யாணத்தின் போது "பெண்காணுதலுக்கு” அருகதை உடையவர் ஆகிறாள். ஏதாவது காரணத்தால் தன் பிறந்த வீட்டாரால் இந்த சீர் நடத்தப்படாவிடில், தன் புகுந்தவீட்டுக் கல்யாணத்திலும், எழுதிங்கள் சீர், செய்துகொள்ளும் வழக்கம் உண்டு.
• இது ஒரு முக்கியமான சீர். திருமணங்களில் செய்யும் எல்லாச் சீர்களையும் அருமைக்காரர் - அருமைக்களிகளைக் கொண்டுதான் செய்ய வேண்டும் என்று நமது சமூகத்தில் ஒரு நியதி உண்டு.
• முகூர்த்தக்கால் போடவும், பட்டை வார்த்தல், சிறப்புக்கு பூஜை செய்தல், காப்புநூல் பிடித்தல் இப்படியாக வரும் திருமணத்தில் வரும் பல சீர்களை, அருமைக்காரர்கள் முக்கிய நபராக இருந்து நடத்திக், கொடுப்பார்கள்.
• இந்தச் சீர் சாதாரணமாக, தங்களுடைய மகள் அல்லது மகனுக்கு திருமணம் நடக்கும் போதுதான் நடக்கும். அருமைச்சீர் நடக்கும் நாளன்று அருமைச்சீர் தம்பதியர் விரதம் இருந்து ஒரு நேரம் தான் சாப்பிடவேண்டும்.
• அவர்கள் இருவரும் எண்ணை தேய்த்து வீட்டிலேயே மங்கள ஸ்நானம் செய்ய வேண்டும். தற்காலத்தில் திருமணமே, மண்டபத்தில் நடைபெறுவதால், அவர்களும் மண்டபத்திலேயே மங்கள ஸ்நானத்தை முடித்துக்கொள்ளுவார்கள்.
• பின்னர் அருமைக்காரர்கள் மூன்றுபேர் மூன்று தட்டத்தில் மாமனார் வீட்டுச் சன்மானமான, வேஷ்டி புடவைகள், தேங்காய்பழம், வெற்றிலைபாக்கு, புஷ்பம் ஆகியவைகளை மூன்று தட்டுகளில் வைத்து எடுத்துக்கொண்டு, எல்லோருமாக மூன்று அருமைச்சீர்க்காரர்களுடைய வீட்டுக்குச் சென்று கட்டிலைப் போட்டு அதன் மேல் கொண்டு வந்ததட்டுக்களை வைத்து மூன்று முறை சுற்றி வந்து அவர்களுடைய ஆசியைப் பெற்று, பின்பு கோவிலுக்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் பூஜித்து ஆராதனை செய்து தெய்வ அனுக்கிரஹம் பெற்று பின்பு (வீட்டுக்குத்) திருமண மண்டபத்தை அடைவார்கள்.
• பின்பு தம்பதிகள் இருவருக்கும் மணமகன் - மணமகள்போல் அலங்காரம் செய்து ஆண்மகனுக்கு சந்தனம் கீரி சிகப்பு உருமாலை வைத்து பெண்மணிக்கு சந்தனம் கீரி நிறைய நகை போட்டு நன்கு அலங்காரம் செய்வர். இவர்களைத் தோழன் - தோழியர் அழைத்து வந்து மணவறையில் நிற்க வைப்பார்கள்.
- பிறகு புரோகிதர் பூஜை செய்து விபூதி குங்குமப் பிரசாதம் வழங்குவார்.
• முதலில் மாமனார் வீட்டு சம்பாவனையாக பட்டுப்புடவை, சோமன், பணம், தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் வைத்த தட்டை தம்பதிகளுக்கு வழங்குவார்கள். பின்னர் உற்றார் உறவினர் ஓதிவைக்கும் புடவை சோமனைத் தம்பதிகளுக்கு வழங்குவார்கள். சிலர் பணமாகவும் ஒதி வைப்பதுண்டு.
• பின்னர் அவர்கள் மணவறையிலிருந்து வந்து மாமனார் வீட்டுப் பெரியவர்களை மட்டும் நமஸ்கரிப்பார்கள்.
• அன்றுமுதல் அவர்கள் அருமைக்காரர் அந்தஸ்துப்பெற்று எல்லாச்சீர்களையும் செய்யத்தகுதி பெற்றவர்களாவார்கள்.