தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

திருமணத்திற்க்கு முன்


1) பெண் கேட்பது

2) திருமணம் உறுதி செய்தல்

3) பத்திரிகை எழுதுதல்

4) மணமகன் வீட்டில் பட்டை வார்த்தல்

5) மணமகள் வீட்டில் பயறு வறுத்துப் பட்டை வார்த்தல்

6) குலதெய்வப் பிரார்த்தனை/காணிக்கை முடிதல்


1) பெண் கேட்பது:

கல்யாண வயது வந்த பையன், வீட்டுப்பெரியவர்கள், உரிமை பந்துக்கள் வீட்டில் பெண் இருந்தால், நெருங்கிய உறவினர் மூலம் பெண் கேட்பது வழக்கமாக இருந்தது. பின்னர் கல்யாணப் பருவம்வந்த பெண் உள்ள வீட்டுப் பெரியவர்கள், உரிமை, பந்துக்கள் வீட்டில் மணப்பருவத்தில் மகன் இருந்தால் நெருங்கிய உறவினர்மூலம் பெண் சொல்லி விடுவது, என்ற வழக்கத்தையும் கைக்கொண்டார்கள்.

மணப்பெண் மணமகன் வீட்டார் சம்மதம் தெரிவித்த பின்பு, சகுனம் பார்த்தோ, கோவிலில் பூவைத்துக் கேட்டோ, ஜாதகப் பொருத்தம் பார்த்தோ அல்லது மனப்பொருத்தம் பார்த்தோ திருமணம் செய்து கொள்வதாக தாம்பூலம் மாற்ற முடிவு செய்வார்கள்.


2) திருமணம் உறுதி செய்தல்:

திருமணம் நிச்சயம் ஆனவுடன் ஒரு நல்ல நாள் பார்த்து மாப்பிள்ளை வீட்டிற்குப் பெண் வீட்டார் தங்களுடைய பங்காளிகள், சொந்த பந்தங்களை அழைத்துச்செல்ல வேண்டும்.

மாப்பிள்ளை, பெண் இரு வீட்டாரும் அப்பொழுது வாங்கி தட்டில் வைக்கவேண்டிய பொருள்கள் :-

பெரிய தேங்காய் - 5

பூம்பழம் - 2 சீப்பு

பெரியதாக வெற்றிலை - 1 கவுளி

பாக்கு - 1 பெரிய பேக்கட்

விரலி மஞ்சள் - 100 கிராம்

குங்குமச் சிமிழ் – 1

பூ – 10 முழம்

பெண் வீட்டார் திருமண நகல் எடுத்துச் செல்லவும்.


3) பத்திரிகை எழுதுதல்:

திருமண நாள் சுப முகூர்த்த நேரம் இவைகளை இரு வீட்டாரும் கலந்து பேசி முடிவு செய்தபின் திருமணப் பத்திரிகை அச்சடிக்கப்படும். ஒரு நல்ல நாளில், மணமகள் வீட்டில், மணமகள் வீட்டாரும் அவர்கள் பங்காளிகளும், மணமகன் வீட்டாரும் அவர்கள் நெருங்கிய உறவினர்களுடன் ஒன்று கூடி, நல்ல நேரத்தில், மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துப் பூஜை செய்ய் வேண்டும்.

பத்திரிகைகளுக்கு மஞ்சள் தடவி முதலில்

1) பாலக்காடு விற்றூணியார் கோவில்

2) மாப்பிள்ளை வீட்டு குலதெய்வ கோவில்

3) பெண் வீட்டு குலதெய்வ கோவில்

4) மேல்மடம் ஆதீனம் / கூனம்பட்டி ஆதீனம்

திருமணப் பத்திரிகை எழுதிவிட்டுப் பின்னர், உற்றார் உறவினர்களுக்கு விலாசம் எழுதி விலாசச்சீட்டு ஒட்டி பத்திரிகைகளை அனுப்புவார்கள்.

அன்று மணமகள் வீட்டார் அனைவருக்கும் சிறப்பாகச் சிற்றுண்டி கொடுத்து உபசரிப்பார்கள்.

சமீப காலமாக உறுதி செய்வது மற்றும் பத்திரிகை எழுதுதல் இரண்டும் ஒன்றாக செய்யப்படுகின்றன.


4) மணமகன் வீட்டில் பட்டை வார்த்தல்:

மணமகன் வீட்டில் நிச்சயதார்த்த கூறைக்குப் போடுவதற்கு 3 அல்லது 5 நாட்கள் முன்னதாக இதனைச் செய்ய வேண்டும்.

அருமை சீர் செய்து கொண்ட பெண்கள் இருவர் சுவாமி அறையில் விளக்கு ஏற்றி வைத்துப் பூஜை செய்தபின் வீட்டின் முன் வாசற்படியில் காவியிலும் சுண்ணாம்பிலும் (சிவபெருமான் கோவிலின் வெளியில் மதிற் சுவரில் பட்டை அடிப்பது போல) பட்டை வார்க்க வேண்டும்.

வீட்டிற்கு வந்த உறவுமுறைப் பெண்கள் அனைவருக்கும் காபி கொடுத்து. வெற்றிலை, பாக்கு, பூ, குங்குமம் கொடுக்க வேண்டும். டிபன் கொடுப்பது அவரவர் சௌகர்யம்.


5) மணமகள் வீட்டில் பயறு வறுத்துப் பட்டை வார்த்தல் :

பெண் வீட்டில் நிச்சயதார்த்த கூறைக்கு போடுவதற்கு 3 அல்லது 5 நாட்கள் முன்னதாக (அதாவது திருமணம் நடைபெறும் இடத்திற்கு வெகு தொலைவில் உள்ளவர்கள் 5 நாட்கள் முன்னதாக இதனைச் செய்யலாம்).

நல்ல நேரத்தில் அருமை செய்த பெண்கள் இருவர் பூஜை அறையில், பூஜை செய்யவும்.


1) பிறகு அடுப்பிற்கு விபூதி குங்குமம் வைத்து. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் நெல்லைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி வேக வைத்து வடித்து ஆற வைத்து கல்யாண மண்டபத்திற்கு எடுத்துச் செல்லவும்.

இதை நம் அவினாசி கல்யாண மண்டத்தில் வேலைக்காரர்களிடம் கொடுத்தால் அவர்கள் ஆட்டுரலில் தீட்டிக் கொடுத்து விடுவார்கள்.

உபயோகம்:

இந்த அரிசியை மணமகன், மணமகளுக்குத் தண்ணீர் வார்க்கும்போது சோறு சுற்றிப் போட உபயோகப்படுத்துவர்.


2) பச்சைப்பயறு வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து, அம்மி குழவியால் உடைத்து முறத்தில் புடைத்துச் சுத்தம் செய்யவும்.

உபயோகம்:

கூறைக்குப் போடும் சமையலில் பருப்பு, ரசம் வைக்க உபயோகப் படுத்துவர்.

பச்சரிசி நனைப்பதற்கும் உபயோகப் படுத்துவர். முதல் முதலாக மணமகள் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்லும் போது இந்தப் பொருள்களை எடுத்துச் செல்லவும்.


வீட்டின் முன் வாசற்படியில் சுமங்கலிப்பெண்கள் காவியிலும் சுண்ணாம்பிலும் மாறி மாறி கோடுகளைப் பட்டையாகப் போடவும்.

இந்த நிகழ்ச்சிக்குப் பெண் வீட்டார் தமது உறவுமுறை சுமங்கலிப் பெண்களைக் கூப்பிட்டுச் செய்யலாம். வீட்டிற்கு வந்தவர்களுக்கு காபி. வெற்றிலை, பாக்கு. பூ கொடுக்கவும்.


6) குலதெய்வப் பிரார்த்தனை/காணிக்கை முடிதல்:

• மணமகன் இல்லத்தில், நடுவீட்டில், சிறியதாக செம்மண்ணில் வழித்துவிட்டு பசுவின் சாணம் அல்லது மஞ்சள் தூளில் பிள்ளையார் பிடித்து, அதில் வைத்து, அதற்குப் பொட்டுவைத்து பூ வைத்து , ஒரு தேங்காய் உடைத்து 2 பழம் வெற்றிலை பாக்கு, பூ வைத்து, பாலக்காடு விற்றூணியார் வினாயகர் பூஜைசெய்து, திருமணம் ஒருவித தடங்கலும் இன்றி நடைபெற, வேண்டிக்கொண்டு மேலும் அவர்கள் குல தெய்வத்தை நினைத்துப் பிரார்த்தனை செய்துகொண்டு ஒரு மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து வைக்கவேண்டும்.

• பின்பு மணமகன் விற்றுாணியார், மற்றும் குல தெய்வத்தை நமஸ்கரித்து மற்றும் பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெறுதல் வேண்டும்.

• இதுபோலவே மணமகள் வீட்டிலும், விற்றூணியார் வினாயகர் பூஜை செய்து, திருமணம் ஒருவித தடங்கலும் இல்லாமல் நடைபெற வேண்டிக்கொண்டு குலதெய்வத்தை நினைத்து பிரார்த்தித்துக் கொண்டு, ஒரு மஞ்சள் துணியில் காணிக்கை முடிதல் வேண்டும்.

• பின்பு மணமகன் வீட்டில் உள்ள வயதான சுமங்கலிகள் இருவர், நிச்சயதாம்பூலத்துக்கு போகிறவர்களிடம் நல்ல சகுனம் ஆகி, நல்லபடியாய், நிச்சயதாம்பூலம் செய்துவரும்படி ஆசீர்வதித்து, வெற்றிலை, பாக்கு கொடுத்து வழியனுப்ப வேண்டும். மணமகன், வீட்டில் இருப்பார்.

• மணமகன் வீட்டார், மற்றும் உறவினர்களுடன் நிச்சயதாம்பூலத்துக்காக, தேங்காய் 5, பழம் 4 சீப்பு, வெற்றிலை 5 கட்டு, பாக்கு 1 படி, மஞ்சள், குங்குமம், பூ 2 பந்து ஆகியவைகளைக் கூடையில் வைத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்கு செல்வார்கள். அநேகமாக ஆண்கள்தான் செல்வார்கள். சொந்தமாக இருந்தால் இரண்டொரு பெண்களும் உடன்செல்வார்கள்.

• தற்போது திருமணம் மண்டபத்தில் நடப்பதால் இவற்றை எடுத்துக் கொண்டு மண்டபத்திற்க்கு செல்வார்கள்.