நிச்சய தாம்பூலம்
2) காப்பு நூல் - திருமாங்கல்ய நாண் – தயாரித்தல்
4) சுப மாங்கல்யப் பிரார்த்தனை - முன்னோர் வழிபாடு (கூறைக்குப் போடுதல்)
6) பட்டை வார்த்தல் - மேல்கட்டி கட்டுதல்
8) சீர்த்தண்ணீர் எடுத்து வருதல்
• மணமகன் வீட்டார், - மணமகள் இல்லத்தை, - தற்காலத்தில் திருமணமண்டபத்தை அடைந்ததும் தாங்கள் கொண்டுவந்த தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, புஷ்பம் அத்துடன் ரூபாய் நோட்டும் ஒரு தட்டில் வைக்கவேண்டும். மணமகள் வீட்டு பெண்கள் இருவர் நிச்சய தாம்பூலத்துக்கு வந்துள்ள பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு பாக்கியுள்ளோரை 'வாருங்கள்’ என்று சொல்லி வரவேற்கவேண்டும்.
• மணமகன் வீட்டைச் சேர்ந்த இருவர் கிழக்கு முகமாகவும், மணமகள் வீட்டைச் சேர்ந்த இருவர் வடக்குமுகமாகவும் உட்கார்ந்து கொள்ள, பங்காளிகள் மற்றும் உற்றார் உறவினர் சுற்றிலும் அமரவேண்டும்.
• முதலில் மணமகள் வீட்டைச் சேர்ந்த இருவர் தனித்தனியே, வெற்றிலை பாக்கை தட்டில் வைத்து, மணமகன் வீட்டைச் சேர்ந்த இருவருக்கு கொடுக்க வேண்டும். வெற்றிலைபாக்கு பெற்றுக்கொண்ட, மணமகன் வீட்டார் , தங்களுடைய பங்காளிகளுக்கு சிறுவர் உள்பட, எல்லோருக்கும் வெற்றிலை பாக்கை தட்டில் வைத்து கொடுக்க வேண்டும்.
• அதன்பிறகு மணமகன் வீட்டைச் சேர்ந்த இருவர் தனித்தனியே, வெற்றிலை, பாக்கை தட்டில் வைத்து மணமகள் வீட்டைச் சேர்ந்த இருவருக்கு, கொடுக்க வேண்டும். மணமகள் வீட்டார் வெற்றிலை பாக்கு பெற்றுக்கொண்டதும், தங்கள் பங்காளிகளுக்கு சிறுவர் முதல் அனைவருக்கும் வெற்றிலை பாக்கு கொடுக்க வேண்டும்.
• இதன்பின்னர், "செட்டுக்காரர்" குடும்பத்தார் யாரேனும் நிச்சயதாம்பூலத்துக்கு வந்திருந்தால் அவர்களுக்கு முதலில் வெற்றிலைபாக்கு கொடுத்துவிட்டு, பிறகு வந்திருக்கும் அனைத்து உறவினர்களுக்கும் வெற்றிலைபாக்கு கொடுக்க வேண்டும்.
• இவ்வாறு, வெற்றிலைபாக்கு தாம்பூலம்) மாற்றிக்கொண்டு திருமணத்தை நிச்சயம் (கெட்டி) செய்து கொள்வதே நிச்சயதார்த்தம்.
• பின்னர் மணமகள் வீட்டைச் சேர்ந்த பெண்கள் இருவர் வந்து, வீட்டாரைப் பார்த்து, மணமகளுக்கு இன்ன இன்ன நகைகள் புடவைகள் வேண்டும் என்று கேட்பார்கள்.
• பிறகு தேங்காய் பழம், வெற்றிலைபாக்கு, புஷ்பம் உள்ள தட்டை மணமகன் வீட்டார் இருவரும், மணமகள் வீட்டார் இருவரும், பிடித்து தண்ணீர் நிரப்பிய பானை (குடம்) மேல் வைத்துவிட வேண்டும்.
• மணமகள் வீட்டைச் சார்ந்த இரு பெண்கள் தேங்காய், பழத்தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே செல்வார்கள். மணமகளின் முந்தானையில் தேங்காய், பழம் வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து கட்டுவார்கள். அவளும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெறுவாள். பின்னர் நிச்சயதாம்பூலத்துக்கு வந்த அனைவருக்கும் விருந்து அளிப்பார்கள்.
முன்பு ஐந்து நாள் கல்யாணமாக இருந்தபோது, "திருமண நாள் குறித்தல்" என்ற நிகழ்ச்சி நடந்து வந்தது. தற்காலத்தில் இது நடைபெறுவதில்லை.
மணமகன் வீட்டைச் சேர்ந்த ஐந்து-ஆறு சிறுவர் இளைஞர்கள் மணமகள்இல்லத்துக்குச் செல்வர். அவர்களுக்கு நீர்மோர், பானக்கம் கொடுத்து மணமகள் இல்லத்தார் உபசரித்து வரவேற்பர். பின்னர் வந்திருக்கும் சிறுவர்கள் இந்த மாதம் இந்தத் தேதியில், மணமகன்-மணமகள் பெயர் சொல்லி இருவருக்கும் திருமணம் என்று தேதி குறிப்பார்கள். அவர்களுக்கு அன்று விருந்து கொடுக்கப்படும்.
தற்போது இந்த “திருமண நாள் குறித்தல்” நடைபெறுவதில்லை என்பதால், நிச்சயதாம்பூலம் முடிந்தவுடன் அனைவருக்கும் நீர் மோர், பானக்கம் வழங்கப்படுகிறது.
2) காப்பு நூல் - திருமாங்கல்ய நாண் – தயாரித்தல்:
இரண்டு அருமைக்காரர்கள் தலைக்கு உருமாலை கட்டிக்கொண்டு
தேங்காய்,
பழம் ஒருசீப்பு,
வெற்றிலை,பாக்கு,
மஞ்சள், குங்குமம்,
சந்தனம், புஷ்பம்,
கன்னிபெண் நூற்ற நூல்
இவைகளை ஒரு தட்டில் வைத்து ஒருவர் கிழக்கு முகமாகவும் மற்றவர் வடக் கு முகமாகவும் அமர்ந்து, முன்னூல் பிடித்து
1) 6 அங்குல நீளத்தில் பிள்ளையார் காப்பு நூலும்,
2) 12 அங்குல நீளத்தில் மணமகனுக்கு காப்பு நூல் ஒன்றும்
3) 12 அங்குல நீளத்தில் மணமகளுக்கு காப்பு நூல் ஒன்றும்
4) 9 அல்லது 11 இழையில் 24 அங்குல நீளம் உள்ளதாக திருமாங்கல்ய நாணும் (சரடு) நன்றாக மஞ்சள் தீத்தி தயாரிப்பார்கள்.
திருமாங்கல்ய சரட்டில் திருமாங்கலியத்தை கோர்த்து இருபக்கமும் முடிபோட்டு பெரிய வெற்றிலையில் வைத்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து சிவப்பு நிற பூ வைத்து பூஜையில் வைப்பார்கள்.
திருமணக் கூடத்தில் உள்ள மாடத்தில் பெரிய மாக்கல் விளக்கில் நிரம்ப எண்ணெய் விட்டு கனமான திரிபோட்டு விளக்கு ஏற்றவேண்டும். இந்த விளக்கு திருமண நிகழ்ச்சிகள் முடியும்வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க வேண்டும்.
4) சுப மாங்கல்யப் பிரார்த்தனை - முன்னோர் வழிபாடு (கூறைக்குப் போடுதல்) :
மணமகன் வீட்டில்:
கூறைக்குப் போடுவது என்பது, திருமணம் எவ்விதத் தடங்கலும் இன்றி நடைபெறும் பொருட்டு, மணமகன்-மணமகள் வீட்டார்கள் முன்னோர்களுக்கு படையல் படைத்து, பூஜை செய்தல் ஆகும்..
பங்காளிகளில், சீர் செய்து கொண்ட பெண்கள் ஸ்நானம் செய்து பவித்திரமாக சுமார் 7 அல்லது 5 இலைகளுக்கு போதுமான அளவில், ஏழுவகைக் காய்கறிகள், குழம்பு பதார்த்தங்கள், வடை, பணியாரம் செய்து சாதம் வடிக்க வேண்டும்.
எல்லாம் தயாரானவுடன் நடுவீ ட்டில்,
- அந்த அறையின் வாயில்படிக்கு நேராக செம்மண்ணில் வழித்துவிட்டு,
- பலகை போட்டு மஞ்சள் தூளில் பிள்ளையார் பிடித்து வைத்து
- மணமகன் வேஷ்டி, மணமகன் அணியும் நகைகள், முன்னோர் அணிந்திருந்த நகைகள் (காசுமாலை) இவற்றோடு
- பிள்ளையார் காப்பு, மணமகன் காப்புநூல், திருமாங்கல்ய நாண் ஆகியவைகளை வைத்துவிட்டு
- அதற்கு முன்னால் ஏழு அல்லது ஐந்து தலைவாழை இலை போட்டு சுத்தம் செய்து காய்கறி பதார்த்தங்களை படைத்து
- திருமாங்கல்யத்துக்கு பொட்டு வைத்து புஷ்பம் சாத்தி
- திருமணம் நன்றாக நடக்கவும் மணமக்களின் இல்லறம் செம்மையாக நடைபெறவும் முன்னோர்கள் ஆசிபெற மனதார வேண்டி, அருமைக்காரர் தூபதீபம் காட்டி பூஜை செய்ய வேண்டும்.
மணமகன் நமஸ்காரம் செய்தபின் பங்காளிகள் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் எல்லோரும் முன்னோரை வேண்டி, நமஸ்காரம் செய்தல் வேண்டும்.
பூஜை முடிந்தவுடன் ஒவ்வொரு படைப்பின் எல்லாப் பதார்த்தங்களிலிருந்து முறைப்படி சிறிய அளவில் ஒரு தாம்பாளத்தில் சேகரித்துக்கொண்டு வீட்டின் முன்பக்கம் உள்ள கூரைக்கு எடுத்துச் சென்று கூரைமேல் நீர் தெளித்து புனிதமாக்கி விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு கொண்டு வ்ந்த பதார்த்தத்தை கூரைமேல் போட வேண்டும். பின்பு தாம்பாளத்தில் படையலில் உள்ள பதார்த்தங்களை மறுமுறையும் சேகரித்து கூரைக்கு மேல் போடுவார்கள்.
இவ்வாறு முன்னோர் பூஜை முடித்த பின்பு காப்பு நூல்களையும் திருமாங்கல்யத்தையும் ஒரு வெற்றிலையில் வைத்து ஞாபகம் உள்ள அருமைக்காரர் வசம்கொடுத்து பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி சொல்ல வேண்டும். முகூர்த்த நேரத்திற்கு முன்னதாகவே அந்த அருமைக்காரர் மணவறை அருகில் இருக்க வேண்டும்.
மணமகள் வீட்டில் :
மணமகள் இல்லத்திலும் மேலே குறிப்பிட்ட விதமே
- பெண்ணின் புடவை, நகைகள், முன்னோர்கள் புடவை நகைகள்காசுமாலை
- மணமகள் காப்புநூல் இவைகளை ஒரு பலகை மேல் வைத்து முன்னோர்களை நினைத்து பூஜை செய்தல்வேண்டும்.
கூரைக்கு போடுவது முன்பு மணமகன் மற்றும் மணமகள் தங்களது வீட்டில் செய்து வந்தனர். தற்போது பெரும்பாலான சமயங்களில் இரு வீட்டாரும் வெளியூரிலிருந்து மண்டபத்திற்க்கு வந்து திருமணம் செய்வதால், கூரைக்குப் போடுவது மண்டபத்திலேயே செய்யப்படுகிறது.
குறிப்பு:-
மணமகன் வீட்டார், மணமகள் வீட்டுக்கு பத்திரிகை எழுதுவதற்கு பங்காளிகளுடன் செல்வதால் அன்றே நிச்சயதாம்பூல நிகழ்ச்சியையும் நடத்தலாம். ஒரு சிலர் அப்படியும் செய்கின்றனர்.
அப்படி நிச்சயதாம்பூலம் செய்துவிட்டால் மணமகன் வீ ட்டிலேயே மதியத்தில் முன்னோர்களை நினைத்து பூஜை முடித்து கூரைக்குப் போட்டுவிட்டு, பின்பு திருமண மண்டபத்துக்கு செல்லலாம். இப்படி, வீட்டில் முன்னோர் வழிபாடு பகல் நேரத்தில் செய்தல் சிறப்பு. இது ஒரு யோசனையே. அவரவர் செளகரியம் போல் செய்து கொள்ளலாம்.
மணவறை போடும் இடத்தில்
• ஒரு மரத்தூணில், நான்கு அடிநீளம், 3 விரல் கனத்தில் மூன்று கவுட்டி உள்ள பாச்சான் கோலை தோல் நீக்கி சீவி கழுவி, கட்டவேண்டும்.
- இரண்டு அருமைக்காரிகளைக் கொண்டு, பிள்ளையார் வைக்கவும் முக்காலி வைக்கவும்
• செம்மண்ணில் வழித்துவிட சொல்லி பிள்ளையார், வைத்து, பொட்டு வைத்து, புஷ்ப ம் சாத்தி, ஒரு தேங்காய் உடைத்து 2 பழம், வெற்றிலை பாக்குடன் வைத்து, ஒரு தட்டில் சூடம், சாம்பிராணி, விபூதி, மஞ்சள், குங்குமம், ஊதுபத்தி வைத்து, குத்துவிளக்கு ஏற்ற வேண்டும்.
• மற்றும் ஒருதட்டில் தேங்காய் ஒன்று, பழம் ஒரு சீ ப்பு, ஒரு அடி அகலம், 3 அடி நீளம் உள்ள மஞ்சள் துணியில் நவதானியம் 1 ரூபாய் நாணயம் போட்டு முடிந்து வைத்துக்கொண்டு
• 4 முழம் புஷ்பம், பெரிய கெண்டியில் ஜலம், சிறிய கெண்டியில் பாலும் வைத்துக்கொண்டு இரண்டு \அருமைக்காரர்களைக் கொண்டு பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும்.
• பின்னர் மரத்தூணில் கட்டியிருக்கும் முகூர்த்தக் காலுக்கு கெண்டியிலுள்ள தண்ணீர் விட்டு, பின்பு பால்விட்டு அபிஷேகம் செய்து
• மஞ்சள் துடைத்து விபூதி இட்டு, சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து நவதானியம் கட்டியிருக்கும் மஞ்சள் துணிக்கு தூபம் காட்டிவிட்டுஅதை மங்கல வாத்தியம் முழங்க முகூர்த்தக் காலில் கட்டி அதற்கு தூப தீபம்காட்டி, பூஜை செய்ய வேண்டும்.
6) பட்டை வார்த்தல் - மேல்கட்டி கட்டுதல்:
அருமைக்காரிகள் 5 பேர் சுண்ணாம்பும் செம்மண்ணும், தனித்தனி பாத்திரத்தில் கரைத்துக் கொண்டு தூண்களுக்கு பட்டை வார்க்க வேண்டும். அவர்களுக்கு மரியாதை நிமித்தமாக, வெற்றிலை பாக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும்.
மணவறை போடும் இடத்திற்கு மேலே வண்ணான் வெள்ளைத் துணிகொண்டு மேல்கட்டி கட்டுவான். தற்சமயம் கல்யாண மண்டபத்தில், திருமணம் நடப்பதால் மேல்கட்டி கட்டுவதுநின்றுவிட்டது. கல்யாண மண்டபத்து வாசலில் சிலர் மேக்கட்டி கட்டுவர்.
• கல்யாண மண்டபம் வாசலில் ஒரு இடத்தில் இரண்டு அருமைக்காரிகள் செம்மண்ணில் வழிக்க வேண்டும்.
• பிள்ளையார் பிடித்து வைத்து, முக்காலியில் ஒரு தட்டில் 1 படி புழுங்கல் அரிசி, ஒரு தேங்காய், 2 பழம் வெற்றிலைபாக்கு 1 ரூபாய் நாணயம் வைக்கவும்.
• பிள்ளையாருக்கு தனியாக தேங்காய் உடைத்து பழம் வெற்றிலை பாக்கு வைத்து பூஜை செய்ய வேண்டும்.
- பின்னர் குயவன் மண்பாண்டங்களை சிரப்பு வைப்பான்.
• இரண்டு அருமைக்காரிகள் பெரிய கெண்டியில் ஜலம் எடுத்து 3 தடவை சிரப்பைச் சுற்றி வரும்போது கெண்டியில் உள்ள ஜலத்தை லேசாக ஊற்றிக்கொண்டே வந்து உடைத்து வைத்த தேங்காய் பழம், வெற்றிலை பாக்கு இவைகளை ஒரு பானையில் போட்டு, எடுத்துக் கொண்டு பூரா சிரப்பையும் வீட்டுக்குள் எடுத்துச் செல்லவேண்டும்.
8) சீர்த்தண்ணீர் எடுத்து வருதல்:
வாத்தியம் முன் செல்ல அருமைக்காரிகள் 5 அல்லது 7 பேர் சீர் தண்ணிக்கு போகும்போது ஒரு தட்டில் 10 முழம் மாலை, மஞ்சள், குங்குமம் சூடம் சாம்பிராணி, ஊதுபத்தி, விபூதி, ஒரு தேங்காய், 2 பழம் இவைகளை எடுத்துக் கொண்டு பந்தத்துடன், கூடி தண்ணீர்க் கிணற்றுக்குப் போய் குடங்களில் தண்ணிர் நிரப்பி, பெண்களுக்கு விபூதி, சந்தனம் குங்குமம் புஷ்பம் கொடுத்துவிட்டு சீர்த்தண்ணீர் குடங்களை எடுத்து வருவார்கள்.
அருமைச்சீர்க் காரர்கள், பெரமண்ணுக்கு (புற்று மண்) 3 சிறிய கூடை எடுத்துக்கெண்டு, ஒரு தட்டில்
தேங்காய் - 1,
பழம் - 2
வெல்லம் - 2,
வெற்றிலை பாக்கு,
1ரூபாய் நாணயம்
சின்ன கெண்டியில் பால்
எடுத்துக்கொண்டு பாம்பு புற்று இருக்கும் இடத்துக்குப் போய், புற்றுக்குள் பாலைவிட்டு, பழத்தை உரித்துப் போட்டு, வெல்லத்தையும் உடைத்துப் போட்டு தேங்காய் உடைத்து பூஜை செய்து நாணயத்தை புற்றுக்குள் போட்டுவிட்டு, புற்றுமண்ணை மூன்று கூடைகளிலும் சேகரம் செய்து, கூட வந்த நாவிதனுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு கொடுத்துவிட்டு, வாத்தியம் முன்னே செல்ல, அருமைக்காரர்கள் மூன்று கூடைகளையும் எடுத்து வந்து ஒரு இடத்தில் வைத்து விடுவார்கள்.
நாவிதன் புற்று மண்ணில் பீடம்போல் அறுத்துவிட்டு 2 உருண்டையும் வைத்து செய்துவிடுவான். பீடம்போல் அறுத்ததில் ஒரு மூங்கில் செருகி பேய்கரும்பும் அரசிலையை கொத்துடன் வைத்துக்கட்டுவான். அதன் மேல் வெள்ளைத்துணி சிவப்புத்துணி சுற்றுவான். அதில் நம் சமூகத்தாரின் சிங்கக் கொடியை மணமக்கள் பார்க்கும்படி கட்ட வேண்டும். 2 உருண்டைகளை கரகங்களுக்கு அடியில் வைக்க வேண்டும்.