தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !

திருமண நாள் – முகூர்த்தம் வரை

1) மணவறை அலங்காரம்

2) குத்துவிளக்கு ஏற்றி, கரகம் வைத்தல்

3) மணமகனுக்கு முகவேலை

4) மணமகன் மங்கள நீராடல்

5) மணமகள் மங்கள நீராடல்

6) மணமகன் அலங்காரம் - மாலை அணிவித்தல்

7) மணமகனுக்கு காப்புக்கட்டுதல்

8) மணமகனை திருமண இல்லத்திற்குஅனுப்புதல்

9) மணமகன் வினாயகர் வழிபாடு

10) மாப்பிள்ளை அழைப்பு

11) புதுக்கல சாப்பாடு

12) மணமகளுக்குப் பட்டம் கட்டுதல், மாலை அணிவித்தல்

13) மணமகளுக்கு காப்புக் கட்டுதல்

14) மணமகன் மனவறைக்கு வருதல்: மணமகளுக்கு பொன்பூட்டுதல்

15) வெற்றிலைபாக்கு பிடித்தல்

16) மாலைமாற்றுதல் – மாங்கல்யதாரணம்

1) மணவறை அலங்காரம் :

• ஐந்து அடிக்குக் குறையாமலும், ஏழு அடிக்கு மேலே போகாமலும், சம சதுரமாக மணவறை அமைக்க வேண்டும்.

• பக்கத்துக்கு 3 மூங்கில் வீதம் 12 உயரமான மூங்கில்களும் 16 சின்ன மூங்கில்களும் 8 சின்ன மூங்கில்களையும் வைத்துக்கொண்டு, மூங்கிலுக்கு மூங்கில் 4 அங்குல இடைவெளி வைத்து முதலில் கட்டவேண்டும்.

• குலை ஈன்றிய வாழைக்கம்பம் 4 எடுத்து, பச்சை மட்டைகளை நீக்கி, வெண்மையான மட்டைகளை எடுத்து, மூங்கில்கள் மேல் வைத்து மூங்கில் தெரியாமல் வாழை நாரினால் கட்டி, தென்னங்குருத்தில் பக்குவமாய் "நறுக்கு" தயார் செய்து இடைவெளி இல்லாமல் வாழைமட்டையில் குத்தி விடவேண்டும்.

• வாழைத் தண்டை சிறுசிறு வட்டமாக நறுக்கி சிகப்புக் குங்குமத்தில் ,தோய்த்து வாழைமட்டையில் அழகாகச் செருக வேண்டும்.

• மணவறையைச் சுற்றி மேல்பக்கம் மாவிலை கட்டவேண்டும்.

• மணவறை உள்ளே மேல் விதானத்தில் சிகப்பு நிறமான சால்வையோ, பட்டோ, துணியோ கட்டி பூமாலை சரங்களாக தொங்கவிட வேண்டும்.

• உள்ளே செம்மண்ணில் வழித்துவிட்டு மணமகன், மணமகள் அமர இரண்டு பலகைகள் போட்டு அதன் மேல் ரத்தின கம்பளம் அல்லது கம்பளியால் ஆகிய சிகப்பு விரிப்பு விரிக்க வேண்டும்.

• புரோகிதருக்கு உட்கார தனி ஆசனப் பலகை, ஈசானிய மூலையில் முக்காலி போட்டு அதில் அருகுமணை த் தட்டு வைக்கவேண்டும்.

  • மணவறையின் முன்பக்கம் மடைக்கலப்பானைகள் அதாவது கரகம் வைக்க வேண்டும்.

• மணவறைக்கு முன்னால் மர உரலில் புதுச்சட்டி வைத்து வண்ணான் அயிரபந்தம் பருத்துவான்.

2) குத்துவிளக்கு ஏற்றி , கரகம் வைத்தல் :

• மணவறை க்கு முன் பக்கத்தில் இரண்டு பெரிய குத்துவிளக்கு . ஏற்றி வைக்க வேண்டும்.

• பின்னர் கரகம் தயார் செய்ய வேண்டும். கரகத்திற்கு, இரு சிறிய மண்பாண்டங்கள், மேல் தட்டு மூடி இரண்டு, பெரிய கெண்டியில் தண்ணீர், இரண்டு படி நெல், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் கொம்பு, வெல்லம், பூமாலை, சந்தனம், விபூதி, குங்குமம், மஞ்சள் ஆகியவைகளைக் கொண்டு கரகம் தயார் செய்வார்கள்.

• அருமைக்காரர்கள், இரண்டு திருகை எடுத்து அருகருகே வைத்து இரு மண்பாண்டங்களை அவைகளில் வைத்து பெரியதில் நெல்லையும் சின்னதில் அருமைக்காரி கெண்டியில் உள்ள தண்ணீரைச் சிந்தாமல் நிறைய ஊற்றி, ஒவ்வொரு பாத்திரத்திற்கும் சின்ன வெற்றிலையாய் இரண்டிரண்டு எடுத்து மூன்று பக்கம் வைத்துவிட்டு, அதன்மேல் மண்தட்டை படிமானமாக வைத்து, இரண்டிரண்டு வெற்றிலையை தட்டின் 3 பக்கம் வைத்து, 4 வெற்றிலை, பாக்கு, பழம் 2, வெல்லம் 2, 1 மஞ்சள்கொம்பு 2 ஆகியவைகளை தட்டின்மேல் வைக்க வேண்டும்.

• விபூதியைத் தண்ணீ ர் விட்டு குழைத்துக் கொண்டு கரகங்களின் " மூன்று புறமும் விபூதி வைத்து பின்பு சந்தனப் பொட்டு குங்குமப் பொட்டு வைத்து தட்டில் கொஞ்சம் புஷ்பம் போட்டு இரண்டு கரகங்களின் கழுத்தில் பூமாலை அணிவித்து, தண்ணீர் உள்ள கரகத்தை ஒரு அருமைக்காரியும், நெல் உள்ள கரகத்தை ஒரு அருமைக்காரரும் எடுத்துப் போய், தண்ணிர் உள்ள கரகத்தை மணமகள் அமரும் இடத்திற்கு எதிரிலும், நெல் உள்ள கரகத்தை மணமகன் அமரும் இடத்திற்கு எதிரிலும் வைக்க வேண்டும்.

3) மணமகனுக்கு முகவேலை :

• அருமைக்காரி, 2 இடங்களில் செம்மண்ணில் வழித்துவிடுவார். ஒன்றில் பிள்ளையார் பிடித்துவைப்பார்.

  • அதற்குப் பக்கத்தில் ஒரு முக்காலிமேல் ஒரு தட்டில்

புழுங்கல் அரிசி - 1 படி

தேங்காய் - 1

பழம் - 2

வெற்றிலை பாக்கு - 2

வெல்லம் - 2

ரூபாய் நாணயம் - 1

இவைகளை வைத்து பிள்ளையாருக்கு சந்தனம் குங்குமம் வைத்து, பூ சாத்தி தேங்காய் உடைத்து வைத்து 2 பழம் வெற்றிலைபாக்கு வைத்து மணமகன் பிள்ளையாருக்கு எதிரில் அமரச் செய்து பிள்ளையாருக்கு ஊதுபத்தி, சாம்பிராணி காட்டி, சூடம் ஏற்றி அருமைக்காரி பூஜை செய்வார்.

• பின்னர் நாவிதன் கிண்ணத்தில் கொஞ்சம் பால் ஊற்றுவர். அவன் மாப்பிள்ளைக்கு முகவேலை செய்வான்.

குறிப்பு:- முன்காலத்தில் கல்யாணத்திற்கு முன்பு பையன்கள் முக சவரம் செய்துகொள்ள மாட்டார்கள். அதனால் முன்பு இதை ஒரு சடங்காக வைத்தனர். தற்காலத்தில் திருமணத்திற்கு முன்பே, அநேகர் தாங்களாகவே சவரம் செய்து கொள்ளுவதால் இந்தச் சடங்கு இப்போது அவ்வளவு முக்கியமாக கருதப்படுவதில்லை.

4) மணமகன் மங்கள நீராடல்:

• மணமகனுக்கு, சிகப்பு பட்டு வேஷ்டி கட்டி, சிகப்பு அங்கவஸ்திரம் போட்டு, சிகப்பு உருமாலை வைத்து அலங்காரம் செய்து, மாப்பிள்ளைத்தோழன் வழிகாட்ட அவன் பின்னால் மணமகன் மங்கல நீராடச் செல்வார்.

• மணமகன் வீட்டைச்சேர்ந்த அருமைக்காரி, முக்காலியின்மேல் அமர்ந்திருக்கும் மணமகனின் தலையில் வெற்றிலையை, கஞ்சியில் நனைத்து , மூன்றுமுறை மணமகன் தலையில் வைத்து தண்ணீர் வார்ப்பார்.

• பின்பு, வெற்றிலையை, எண்ணையில் நனைத்து மூன்றுமுறை மணமகன் தலையில் வைத்து எண்ணை ஸ்நானம் செய்வார்.

• மாப்பிள்ளைத் தோழன் இந்த மங்கள ஸ்நானத்தின்போது மணமகனுக்கு உதவியாக இருப்பார்.

• மங்கள ஸ்நானம் நடக்கும்போது நாதசுரம் வாசிக்க வேண்டும். எவ்வளவு வெளிச்சமாக இருந்தாலும் மரியாதைக்காக வண்ணான் பந்தம் பிடிப்பது வழக்கம். நாதசுர வாத்தியம் எல்லாச் சீர்களின் போதும் வாசிக்க வேண்டும்.

• முதலிலேயே பச்சை நெல்குத்தி சிறுசிறு அடைகள்தயாரித்து எண்ணையில் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுவார்கள். மேற்படிச் சீடையினால் அருமைக்காரி மணமகனுக்கு திருஷ்டி சுத்தி பீடைகள் கழிக்கப்படுகிறது. அதற்குபின் பலிச்சாதம் கொண்டு திருஷ்டி சுத்தி தோஷங்கள் கழிக்கப்படுகிறது. பின்னர் சீடையை எழுத்தாணியுடன், பிடித்து பீடை கழிக்கப்படுகிறது.

5) மணமகள் - மங்கள நீராடல்:

மணமகள் வீட்டு அருமைக்காரியால் மேலே குறிப்பிட்ட முறையில், மணமகளுக்கும் மங்கல நீராட்டு நடைபெறும்.

6) மணமகன் அலங்காரம் - மாலை அணிவித்தல்:

மணமகனுக்கு சிகப்பு பட்டு வேஷ்டியில் பஞ்சகச்சம் வைத்து கட்டிய பின்பு உடம்பில் சந்தனம் பூசி கீரிவிடப்பட்டு நெற்றியில் விபூதி பொட்டு வைத்து சிகப்பு அங்கவஸ்திரம், அணிவித்து சிகப்பு உருமாலை வைத்து மாப்பிள்ளைத் தோழனால், அலங்காரம் செய்யப்படுவார்.

பின்னர் மணமகனை பேழை மூடியில் கிழக்கு முகமாக, நிற்க வைத்து மூன்று அருமைக்காரர்களுக்கு குறையாமல் மாத்துமாலை அணிவிக்க வேண்டும். பிறகு கல்யாண மாலைகள் அணிவிக்க வேண்டும்.

7) மணமகனுக்கு காப்புக்கட்டுதல்:

புரோகிதருக்கு,

புண்ணியாச்சனைக்கு அரிசி - 1 படி

நவக்கிரஹத்துக்கு அரிசி - 1 படி,

தேங்காய் - 1

பழம் - 10,

வெல்லம் - 10,

வெற்றிலை, பாக்கு,

சந்தனம், விபூதி, குங்குமம், மஞ்சள்,

புஷ்பம், ஊதுபத்தி, சாம்பிராணி, சூடம்

மேலும்

நெல் உமி, சொம்பு, பஞ்ச பாத்திரம் உத்திரணி, 3 நுனி இலைகள், நெய், பஞ்சகவ்யம், 2 சிறியதட்டம் ஆகியவைகளைக் கொடுக்கவேண்டும்.

மணமகன் வீட்டாருடைய பந்துக்களும் மணமகனை மாப்பிள்ளைத் தோழன் வழிநடத்த மனவறைக்கு அழைத்து வர வேண்டும்.

• வாத்தியகோஷம் முழங்க, பந்துக்கள் புடைசூழ தோழனால் அழைத்துவரப்பட்டு, மணமகன், மணவறையில் அமர்வார்.

• புரோகிதர் புண்ணியாவசனம், பிள்ளையார் பூஜை செய்வார். பின்பு பிள்ளையார் மற்றும் மணமகன் காப்பு நூல்களுக்கு தேங்காய் உடைத்து, பழம் வெற்றிலை பாக்கு வைத்து, பூஜை செய்து விட்டு, பிள்ளையார் காப்பு நூலை, பிள்ளையாரிடம் சமர்ப்பித்து விடுவார்.

• அருமைக்காரர்கள் தலைக்கு உருமாலைக்கட்டிக் கொண்டு மணவறைக்குள் வந்து, ஒரு முக்காலியின் மேல் ஒரு தட்டில்

புழுங்கலரிசி - 1 படி ,

தேங்காய் - 1

பழம், வெல்லம், வெற்றிலை பாக்கு

வைத்து, அந்த முக்காலியை,மணமகன் முன்னால் வைத்து ஒரு அருமைக்கார் இருகைகளையும் விரித்துப்பிடித்து 3 தடவை அரிசியை அள்ளி அள்ளி தட்டத்தில் விடச் செய்வார்.

• 4ம் தடவை அள்ளி எடுத்த அரிசியை மணமகன் கையில் அப்படியே வைக்க, அதன்மேல் தேங்காய், பழம் வெற்றிலை பாக்கு எல்லாம் வைத்து மற்றொரு அருமைக்காரர் மணமகனின் வலது கை மணிக்கட்டில், நாதசுரகோஷம் முழங்க (சகலவாத்தியம்) காப்பைச் சுற்றி உருவாஞ்சுருக்குப்போட்டு, காப்புகட்டிவிட்டு அதன் மேல் விபூதி, சந்தனம், குங்குமம் வைப்பார்.

• பின்னர் மணமகன் தன் கையில் அள்ளியுள்ள அரிசி, தேங்காய், பழம் ஆகியவைகளை தட்டில் விட்டு விடுவார். புரோகிதர், மணமகனுக்கு அருகுமணம் எடுப்பார்.

• பின்னர் இரண்டு அருமைக்காரர்கள் உருமாலைகட்டிக் கொண்டு, ஒவ்வொருவராக மணமகனுக்கு அருகுமணம் எடுத்து ஆசீர்வதிப்பார்கள். பின்பு பலதானம், தாம்பூலதானம் செய்வார்கள். பின்பு தோழன் முன் செல்ல மணமகன், மணமகன் அறைக்குச் செல்வார்.

8) மணமகன் தாயார் - மணமகனை திருமண இல்லத்திற்குஅனுப்புதல்:

மணமகனுக்குத் தாயார் நுனி இலையில் தயிர்சாதம் போட்டு மணமகனுக்கு பணம் வைத்துக் கொடுப்பார். சாப்பிட்ட பின்பு, மணமகள் இல்லத்துக்கு பங்காளிகள் உற்றார் உறவினருடன் மணமகனை அனுப்பிவைப்பார். மணமகன் காரில் (பல்லக்கில்), தோழனுடன் செல்வார்.

9) மணமகன் வினாயகர் வழிபாடு :

மணமகன் பங்காளிகள் உற்றார் உறவினருடன் நாதசுரவாத்தியம் முழுங்க கோவிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து வைத்து, பழம் வெற்றிலை பாக்கு வைத்து ஊதுபத்தி சூடம் காட்டி பூஜை செய்துவிட்டு, கோவில் முன்னால் சிதறு தேங்காய் போட்டுவிட்டு, காரில் திருமண மண்டபத்துக்குப் புறப்படுவார். அப்படிச் செல்லும்போது, தேங்காய் பழம் வெற்றிலைபாக்கு, நாழியரிசிக் கூடையில் பச்சரிசி, ஒரு சொம்பு நிறைய நெய், மற்றும் பேழை மூடியில் "இணைக்காரிக்கு" வேண்டிய, குண்டு எழுத்தாணி, சிகப்பு பட்டுத்துண்டு, சீப்பு ஆகியவைகளை எடுத்துச் செல்வார்கள்.

10) மாப்பிள்ளை அழைப்பு :

மணமகன் தன் பங்காளிகள், உள்ளுர் உறவினர் தமக்கை, தங்கை மற்றும் பெண்கள் புடைசூழ திருமண மண்டபம் நோக்கி மெதுவாக நாதசுரவாத்தியம் முழங்க காரில் புறப்படுவார். முன்பு புலவனின் மூலமாக மணமகன் வருவதை அறிந்த உடன், மணமகள் வீட்டார், தங்கள் பங்காளிகள் உற்றார் உறவினர், நாதசுவர வாத்தியம் முழங்க ஒரு பெரிய தட்டில் தேங்காய்கள், 2 சீப்பு பழம், வெற்றிலை பாக்கு, புஷ்பம், சந்தனப் பேலாவில் சந்தனம் ஆகியவற்றை வைத்து மணமகனை எதிர் கொண்டு அழைக்கச் செல்வார்கள்.

மணமகன் வீட்டார், 'மணமகள் வீட்டார் வரவேற்க வரட்டும் என்று சிறிது தூரம் நகர்ந்தபின், நின்று விடுவார்கள். மணமகள் வீட்டாரும் சிறிது முன்னேறி நகர்ந்து நின்று விடுவார்கள். இருவீட்டாரும் "அவர்கள் வரட்டும்" என்று இப்படியாக சிறிது சிறிதாக முன்னேறி, முகூர்த்த நேரம் நெருங்குவதைப் பொறுத்து, இந்த மாப்பிள்ளை அழைப்பு, யார் முதலில் வருவது என்று பேசிக்கொண்டு பின்பு மிகக் கோலாகலமாக வரவேற்பு நடக்கும்.

மணமகள் வீட்டார், மணமகன் வீட்டாரை “வாருங்கள்” “வாருங்கள்" என்று சொல்லி வரவேற்பார்கள். பெரியவர்கள் தங்களுக்குள் சிறிது குனிந்து நமஸ்காரம் செய்து கொள்ளுவார்கள். மற்றவர்களை வாருங்கள் என்று அழைப்பார்கள். எல்லோருக்கும் சந்தனம் புஷ்பம் கொடுத்து வரவேற்பார்கள்.

இவ்வாறு ஒன்று சேர்ந்து திருமண மண்டபம் சேரும் வரை இரண்டு தரப்பு நாதசுரக்காரர்களும் சேர்ந்து சிறப்பாக வாசித்துக் கொண்டே முன் செல்ல மற்றெல்லோருமாக மண்டபத்தை அடைவார்கள்.

11) புதுக்கல சாப்பாடு:

மணமகன் அறைக்கு, (முன்பு விடுதி வீட்டுக்கு) மணமகன் வந்து சேர்ந்த பின், நங்கையார் இருவர் வந்து, புதுக்கல சாப்பாடு போடுவார்கள். நுனிஇலை போட்டு, சர்க்கரை, பழம் வைப்பார்கள். இதை ஒருஅறிமுக நிகழ்ச்சியாகக் கருதலாம்.

12) மணமகளுக்குப் பட்டம் கட்டுதல் , மாலை அணிவித்தல்:

மணமகளை சிறப்பாக அலங்கரித்து பேழை மூடியில் கிழக்குநோக்கி நிற்க வைத்து, பெண்ணின் தாய் மாமன் இருவர், மணமகள் நெற்றியில் பட்டம்கட்டுவார்கள். பின்னர் முந்தானையில் பணம் முடிவார்கள். அருமைக்காரர்கள் மூன்றுபேர் தனித்தனியாக (மாத்து) மாலை அணிவிப்பார்கள். பிறகு மணமகளுக்கு அருமைக்காரரால் கல்யாண மாலைகள், அணிவிக்கப்படும்.

13) மணமகளுக்கு காப்புக் கட்டுதல்:

மணமகளின் காப்புக்கு, புரோகிதர் தேங்காய் உடைத்து பழம், வெற்றிலைபாக்கு வைத்து பூஜை செய்தபின் இரு அருமைக்காரர்கள் (மாமன்-மைத்துனர்கள்) 'மணமகனுக்கு காப்புக்கட்டியது போலவே அரிசியை மூன்றுதடவை மணமகளை அள்ளிவிடச் செய்து பின்னர் 4ம் தடவை அரிசியை அள்ளி அப்படியே வைக்கச் செய்து அதன் மேல் தேங்காய் பழம் வெற்றிலைப்பாக்கு எல்லாம் வைத்து, மற்றொரு அருமைக்காரர், மணமகளின் வலது கை மணிக்கட்டில் காப்பு நூலைச் சுற்றி உருவாஞ்சுருக்குப்போட்டுக் கட்டி அதன்மேல் விபூதி, சந்தனம் குங்குமம் வைப்பார்கள். பின்னர் அரிசி தேங்காய் பழம் ஆகியவைகளை தட்டில் விட்டுவிடச் செய்வார்கள். புரோகிதர் மணமகளுக்கும் அருகுமணம் எடுப்பார். வேறு இரு அருமைக்காரர்கள் மணமகளுக்கு அருகுமணம் எடுத்து ஆசீர்வதிப்பார்கள். பிறகு பலதானம், தாம்பூலதானம் செய்வார்கள். மனமகளை, தோழி வீட்டுக்குள் அழைத்துச் செல்வார்.

14) மணமகன் மணவறைக்கு வருதல்: மணமகளுக்கு பொன்பூட்டுதல்:

மணமகன் அறையிலிருந்து தோழன், மணமகனை சிறப்பாக அலங்காரம் செய்து முகூர்த்த மாலை அணிவித்து, மணமகனின் தமக்கைகள், தங்கைகள் நெருங்கிய உறவினர் பெண்கள்,குழந்தைகளுடன் நாழி அரிசிக்கூடையுடன் மணப்பெண்ணுக்கு பொன்பூட்டும் நகைகளுடன், அழைத்துக்கொண்டு, மணவறையை வலமாகவந்து மணவறையில் உட்கார வைப்பார்.

பிறகு மணமகளை தோழி அழைத்துவந்து கிழக்கு முகமாக பேழை மூடியில் நிற்க வைத்து மணமகனின், தமக்கைகள், தங்கைகள், மணமகளுக்கு தலைவாரிவிட்டு, பொன் நகைகள் பூட்டுவார்கள். பின்னர் மணமகளை மணவறையில் மணமகனுக்கு வலது புறமாக உட்கார வைப்பார்கள். புரோகிதர், ஹோமம் வளர்த்து, நவக்கிரக பூஜை, திருமாங்கலிய பூஜை செய்வார்.

15) வெற்றிலைபாக்கு பிடித்தல்:

• மணவறைக்கு முன்பு வடகிழக்கில் செம்மண்ணில் வழித்துவிட்டு, பேழை மூடியில், 9 வெற்றிலை, 9 பாக்கு, வீதம், 9 அடுக்கு வைக்க வேண்டும்.

• மணமகன் வீட்டார் இருவர் கிழக்கு முகமாகவும், மணமகள் வீட்டார் இருவர் வடக்கு முகமாகவும் நிற்க, புரோகிதர் சங்கல்பம் சொல்லி, மணமகனின் வீட்டார் இருவரை, மூன்று தலைமுறையினரின் பெயர்களைச் சொல்லி இன்னாருடைய பெளத்திரனும், இன்னாருடைய பேரனும், இன்னாருடைய மகனுமாகிய) - மணமகன் பெயர் சொல்லி – என்ற வரனுக்கு,

• மணமகளின் வீட்டார் இருவரை மூன்று தலைமுறையினரின் பெயர்களைச் சொல்லச் செய்து இன்னாருடைய பெளத்திரியும், இன்னருடைய பேத்தியும், இன்னாருடைய மகளுமாகிய) மணமகள் பெயரைச் சொல்லி - என்ற கன்னிகையை

• பா ணிக்கிரஹணம் செய்து கொடுத்தோம் என்று மணமகளை ச் சேர்ந்த இருவர் சொல்ல, பாணிக்கிரஹணம் செய்து கொண்டோம் என்று மணமகன் விட்டாரைச் சேர்நத இருவரும் சொல்ல வேண்டும்.

• மூன்றுமுறை : புரோகிதர் இவ்வாறு சொல்ல, மணமகன் வீட்டார் இருவரும், மணமகள் வீட்டார் இருவரும் “கொண்டோம்" - “கொடுத்தோம்" என்று சொல்லிவிட்டு மூன்று அடுக்கு வெற்றிலை பாக்கை எடுத்து மாற்றி மாற்றி மூன்றுதரம் கொடுப்பார்கள். பின்னர் இரு வீட்டாரும், புரோகிதருக்கு 2 அடுக்கு வெற்றிலை கொடுப்பார்கள்.

16) மாலைமாற்றுதல் – மாங்கல்யதாரணம் :

• மாங்கல்ய தாரணத்துக்கு சற்று முன் ஓர் தட்டில் அட்சதை வைத்து மண்டபத்தில் அமர்ந்திருக்கும் பெரியவர்கள் எல்லோருக்கும் ஆசீர்வதிக்க அட்சதை வழங்க வேண்டும்.

• குறிப்பிட்ட சுபமுகூர்த்த காலத்திற்குள், இரண்டு அருமைக்காரர்கள் மணவறைக்குள் சென்று மணமகள் அணிந்துள்ள மாலையை மணப்பெண்ணை இருகைகளாலும் பிடித்துக் கொள்ளச்சொல்லி மணமகன் கழுத்தில் அணிவிக்கச் செய்வார்கள்.

• அதுபோலவே மணமகன் அணிந்துள்ள மாலையை மணமகனின் i இருகைகளாலும் பிடித்துக் கொள்ளச்சொல்லி மணமகள் கழுத்தில் அணிவிக்கச் செய்வார்கள்.

• பின்னர் நாதசுர சகலவாத்தியம் முழங்க, இரு அருமைக்காரர்களும் திருமாங்கல்யம் உள்ள மங்கலநாணை எடுத்து, மணமகன் கையில் கொடுத்து, மணமகளுக்கு அணிவிக்கச் செய்து, திருமாங்கல்யம் தலை கீழ் மாறாமல் சரியாக இருக்கும்படியாக செய்துவிட்டு, மணமகனை சரியாக மூன்று முடிச்சு, போடும்படி சொல்லி உதவுவார்கள். மணமகன் மூன்று முடிச்சு போட்ட பின், திருமாங்கல்யத்துக்கு விபூதி, சந்தனம், குங்குமம், வைத்து பூவும் வைப்பார்கள்.

• திருமணக்கூடத்தில் அமர்ந்துள்ள பந்து ஜனங்களும் மற்றோரும் புதுமணத்தம்பதிகளுக்கு அட்சதை தூவி ஆசீர்வதிப்பார்கள். மணமகன் மணமகளுக்கு திலகமிடுவார். முசுடர்த்தம் இனிது நிறைவு பெற்றபின் எல்லோருக்கும் மிட்டாய் வழங்குவார்கள்.